உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறுவை சிகிச்சை செய்தவர் வயிற்றில் பஞ்சு தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

அறுவை சிகிச்சை செய்தவர் வயிற்றில் பஞ்சு தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

புதுச்சேரி: அரசு ஊழியருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ், 42; புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் பித்தப்பையில் கட்டி ஏற்பட்டது.இதற்காக, நெல்லித்தோப்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. 10 நாள் சிகிச்சைக்கு பின் அருள்ராஜ் வீடு திரும்பினார். சில தினங்களில், அருள்ராஜிற்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி ஏற்பட்டது. நெல்லித்தோப்பு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்றும் வலி குறையாததால், ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு, ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நான்கு பஞ்சு துண்டுகள் இருப்பது தெரிய வந்தது. அதனையொட்டி, ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த மார்ச் 3 மற்றும் 7 ம் தேதிகளில் அருள்ராஜிற்கு அடுத்தடுத்து இரு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றி வைத்து தைக்கப்பட்டிருந்த 4 பஞ்சு துண்டுகளை அகற்றினர். அடுத்தடுத்த அறுவை சிகிச்சை காரணமாக உடல் பலகீனமடைந்த அருள்ராஜ் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி கமலா நேற்று காலை தனது இரு மகள்கள், மகன் மற்றும் உறவினர்களுடன் சென்று, நெல்லித்தோப்பு தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.தகவலறிந்த உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தவறான சிகிச்சை குறித்து புகார் கொடுத்தால் மருத்துவமனை மற்றும் டாக்டர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதற்கிடையே தனியார் மருத்துவமனை நிர்வாகம், அருள்ராஜ் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று, அனைவரும் கலைந்து கொண்டனர்.இச்சம்பவத்தால், நெல்லித்தோப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ