உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தளர்வுநிலை பயிற்சிகள் செய்முறை...

 தளர்வுநிலை பயிற்சிகள் செய்முறை...

கடந்த வாரம் தளர்வு நிலைப் பயிற்சிகள் குறித்த முன்னுரையை பார்த்தோம். இனி, தளர்வு நிலைப் பயிற்சிகள் செய்முறையை பார்ப்போம்... யோகத்தின் ஓய்வு நிலை தரையில் ஒரு விரிப்பான் மேல் ஷவாசனத்தில் படுக்கவும். முடிந்தால் தலையை வடக்கு நோக்கி வைப்பது நல்லது. அப்பொழுது தான் உடலின் ஒவ்வொரு அணுவும், பூமியின் புவியீர்ப்பிற்கு ஏற்ப மாற்றங்களை தந்து ஓய்வளிக்கும். இது நாம் உணராமலே சீராக நடைபெறும். சுமார் 20 அல்லது 30 விநாடிகள் செயலற்ற நிலையில் இருந்துவிட்டு, காலையில் எழுந்ததும் எப்படி உடலில் சோம்பல் முறிப்போமோ, அதுபோல் முடிந்த அளவு உடலை நீட்டி விடவும். கால்களை நீட்டி, முட்டிகளை சுழற்றி, நீண்டு சுவாசித்து, மார்பு பகுதியை நன்கு விரித்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி நீட்டி விடவும். மேலும், கழுத்தை இருபுறமும் திருப்பவும். 2 அல்லது 3 நீண்ட சுவாசங்களுக்கு பின் இடதுபுறமாக திரும்ப இவை அனைத்தையும் மீண்டும் செய்து உடலை நீட்டி விடவும். பின்னர் 2 அல்லது 3 நீண்ட சுவாசத்திற்கு பின் முகம் தரையை நோக்கும்படி படுத்து கால், பிட்டம், பெல்விஸ், வயிறு, மார்பு, முதுகுத்தண்டு போன்றவற்றை நீட்டி கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, தோள்பட்டை மற்றும் கழுத்தையும் நன்கு நீட்டி விடவும். தலையை இருபுறமும் திருப்பவும். 5 அல்லது 6 நீண்ட சுவாசத்திற்கு பின் உடலை வலப்பக்கமாக திருப்பி, மீண்டும் முன்பு செய்தது போல் செய்யவும். உடலில் ஒவ்வொரு நிலைக்கும் முன்னராக தேவைப்பட்டால் ஷவாசனத்தில் ஓய்வெடுக்கலாம். பின்னர், அடுத்த நிலைக்கு சென்று வரிசையாக இந்த பயிற்சியை செய்யலாம். இந்த வரிசையில் காணப்படும் அனைத்து நிலைகளையும் முடித்த பின்பு, உடலை முழுமையான ஓய்வு நிலை அல்லது தளர்வு நிலை அளிக்கும் ஷவாசனத்தில் ஒரு நிமிடம் படுத்திருந்து இளைப்பாரவும். பின்னர், குழந்தையை போன்று, முகம் தரையை நோக்கிய நிலையில் படுத்து இளைப்பாருங்கள். இதுபோன்ற நீண்ட சுவாசத்துடன் உடலை நீட்டி தளர்வாக்கும் பயிற்சிகளை உட்கார்ந்த அல்லது நின்ற நிலையிலும் செய்யலாம். ஆனால் சற்று கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் உடலில் ஏற்படும் சமநிலை மாற்றங்களால் நாம் கீழே விழக்கூடும். அவரவர் வயதிற்கும், உடல் வாகிற்கு ஏற்ப சுவாசத்துடன் கூடிய பயிற்சிகளை அமைத்து கொள்ளலாம். பொறுமையுடனும், நிதானமாகவும் செய்ய வேண்டிய பயிற்சிகள் இவை. எனவே மற்ற உடற்பயிற்சிகளை போல் வேகமாக செய்யக்கூடாது. யோகம் என்பது மென்மையான, மெதுவான, கணக்கிடப்பட்ட உடல் அசைவுகளை கொண்டது. எந்த பாகத்திற்காக செய்கிறோம். என்ன அசைவுகள் அளிக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ற நீண்ட, மெதுவான சுவாசத்துடன் செய்ய வேண்டும். இவ்வாறே நம் மனதையும் கட்டுப்படுத்த முடியும். பிற தளர்வு நிலைப் பயிற்சிகள் அடுத்த வாரம் பார்ப்போம்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ