எஸ்.வி. பட்டேல் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
புதுச்சேரி: எஸ்.வி. பட்டேல் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. புதுச்சேரியில், சாலையோர ஆக்கிரமிப்புகள், பேனர்கள், கட் அவுட்கள், கொடி கம்பங்களை அகற்றுவது தொடர்பாக, கடந்த 28ம் தேதி கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.்கூட்டத்தில், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளின் கீழ் உள்ள பகுதியில், பிப். 3ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை, வருவாய்த்துறை, நகராட்சிகள், பொதுப்பணித்துறை மூலம் போலீஸ் துணையுடன், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடத்த முடிவு செய்தனர்.அதன்படி, புதுச்சேரியில் நேற்று காலை எஸ்.வி.பட்டேல் சாலை ஆனந்தா ஓட்டல் துவங்கி, பழைய சாராய ஆலை வரையிலான சாலையோர ஆக்கிரமிப்புகள், அங்கீகரிக்கப்படாத வாடகை பைக் நிலையங்களை அகற்றும் பணி நடந்தது. போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.