உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நுாற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்புபுதுச்சேரி: புதுச்சேரி நேரு வீதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், நகராட்சி ஊழியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி முழுதும் அனைத்து சாலைகளும் ஆக்கிரமிப்பு கடைகள் நிரம்பி வழிகிறது. இதனால் 50 அடி சாலைகள் கூட 20 அடி சாலையாக சுருங்கி விடுகிறது. இதில், இரு பக்கமும் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கலெக்டர் குலோத்துங்கன், நகர மற்றும் கிராமப்புற சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, வருவாய்த்துறை, நகராட்சி, போலீஸ் இணைந்து அகற்ற உத்தரவிட்டார். நேற்று 4ம் தேதி துவங்கி 29 ம் தேதி வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.திட்டமிட்டபடி நேற்று காலை 10:00 மணிக்கு, ராஜா தியேட்டர் சிக்னல் அருகே புதுச்சேரி நகராட்சி, வருவாய்த்துறை, போலீஸ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.நேரு வீதியில் மற்ற வாகனங்கள் வராதபடி தடுப்பு அமைத்து மூடினர். ஜே.சி.பி., லாரியுடன் நேரு வீதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை துவக்கினர். நேரு வீதியுடன் சந்திக்கும் சின்னசுப்ராயப்பிள்ளை வீதி, பாரதி வீதி, காந்தி வீதி, மிஷன் வீதிகளில், தெற்கு பக்கம் ரங்கப்பிள்ளை வீதி வரையிலும், வடக்கு பக்கம் கொசக்கடை வீதி வரை உள்ள ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி., மூலம் இடித்து அகற்றப்பட்டது. சாலையோர கடைகள், தள்ளு வண்டி கடைகள், விளம்பர தட்டிகள், பிளக்ஸ் போர்டுகளை பறிமுதல் செய்து லாரியில் ஏற்றினர். இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தால் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வியாபாரிகளுக்கு 3 முறை அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தற்போது தடுக்க வேண்டாம். உங்களுடைய பொருட்களை அப்புறப்படுத்தி கொள்ள கால அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் அகற்றி கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். நேரு வீதி நடைபாதை வியாபாரிகள் தாங்களாக முன்வந்து பொருட்களை எடுத்து கடைக்குள் வைத்தனர். சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி., செல்வம் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர். நேரு வீதி இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்தால், சம்பந்தப்பட் வியாபாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V GOPALAN
நவ 11, 2024 09:22

20 ஆண்டுகளாக புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றுவோம் என்று முரசு கட்டி இப்போதான் போல . தமிழிசை வேஸ்ட்


முக்கிய வீடியோ