புயலில் சாய்ந்த சவுக்கு மரங்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய இடங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த நெல், கரும்பு, மணிலா என அனைத்து பயிர்களும் பாதித்தன. பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, ஹெக்டேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், புயலில் விழுந்த சவுக்கு பயிருக்கு நிவாரணம் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.கடற்கரை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கு மரங்களும் புயலில் சரிந்து பின்னமாகியுள்ளன. சின்ன வீராம்பட்டினம், பன்னிதிட்டு, பிள்ளையார்குப்பம், நரம்பை, மணப்பட்டு உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் 200 ஏக்கருக்கும் மேல் சவுக்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. இந்த சவுக்குகள் முறிந்து விழுந்துள்ளன.கடற்கரையோரம் மணல் உப்பு தன்மை கொண்டது. இந்த உப்பு பாங்கான இடங்களில் மற்ற பயிர்களை காட்டிலும் சவுக்கு சாகுபடி நல்ல பலனை தரும். இதன் காரணமாக இக்கிராமங்களில் பலரும் சவுக்கு பயிரிட்டனர். ஆனால் பெஞ்சல் புயலில் சவுக்கு மரங்கள் முறிந்து, விவசாயிகளின் நம்பிக்கை குலைந்துள்ளது.கடற்கரையோரம் சாகுப்படி செய்யப்படும் சவுக்கு மரங்கள் இயற்கை பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. புயல் காற்றின் வேகத்தை தடுப்பதோடு, மணல் அரிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன. ஆனால் சவுக்கு சாகுபடியை தவிர்த்துவிட்டு, நிவாரணம் அறிவித்துள்ளது விவசாயிகளின் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. புயலில் சரிந்த மரங்களையும் கணக்கிட்டு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.