| ADDED : பிப் 06, 2024 06:17 AM
புதுச்சேரி : வீட்டில் இருந்து வேலை என கூறி பெண்ணிடம் ரூ. 1.36 லட்சம் பணம் ஏமாற்றிய மர்ம நபர் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றது.திருபுவனை அருகில் உள்ள கொத்தபுரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. தனியார் நிறுவன ஊழியர். சென்னையில் திருமணம் செய்து கொண்டவர். பிரசவத்திற்காக தனது கிராமத்திற்கு வந்தார். கடந்த மாதம் அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவரது மொபைல்போன் வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறியுள்ளார். அதன்படி, மர்ம நபர் அனுப்பிய லிங்க் ஒப்பன் செய்து ஓட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்களுக்கு ரிவிவ் கொடுத்தால் தினசரி ரூ. 150 பணம் கிடைக்கும் என தெரிவித்து, பணமும் அனுப்பி உள்ளனர்.பணம் செலுத்தி டெலிகிராம் மூலம் டாக்ஸ் முடித்தால் பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர். அதை ஏற்று கலைவாணி பணம் செலுத்தி டாஸ்க்குகள் முடித்தார். இதுபோல் பல்வேறு தவணைகளில் ரூ. 1.36 லட்சம் பணம் செலுத்தினார். டாஸ்க் முடித்து தன்னுடைய ஆன்லைன் டேஸ்போர்டில் உள்ள பணத்தை வங்கிக்கு மாற்ற முயற்சித்த போது டேஸ்போர்ட் லாக் ஆகியது. இது தொடர்பாக கலைவாணியின் தங்கை சந்தியா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.