| ADDED : பிப் 15, 2024 05:16 AM
புதுச்சேரி,: புதுச்சேரியில் 7 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 67.61 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர் மொபைல் போனில் ரயில்வேதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி கார்த்திகேயன், பல தவனைகளில் மொத்தம் ரூ. 57.89 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் வழியாக அனுப்பியுள்ளார். அதன் பின், அந்த நபரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதையடுத்து, ரமேஷ் என்பவரிடம் மொபைல் போனில் அடையாளம் தெரியாத நபர், ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி, ரூ. 6.50 லட்சம் பணத்தை அனுப்பி ஏமார்ந்துள்ளார்.அதே போன்று, புருேஷாத்தமன் என்பவரிடம் இருந்து ரூ. 2.16 லட்சமும், குகன் என்பவர் ரூ. 50 ஆயிரம் அனுப்பி ஏமார்ந்துள்ளனர். மேலும், கமலா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ஆதார் எனேபிள் பேமென்ட் சிஸ்டம் மூலம் ரூ. 1000 எடுக்கப்பட்டுள்ளது.கோபாலன் என்பவரிடம் மொபைல் போனில், வங்கி அதிகாரி போல பேசிய மர்ம நபர், கே.ஒ.சி., புதுப்பிப்பதற்காக கூறி, ஆதார், பான் கார்டு விபரங்களை பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டது.பிரசன்னா என்பவர் தனது மசாஜ் சேவைக்காக பொருட்கள் வாங்க ரூ. 5 ஆயிரம் பணத்தை அனுப்பினார். ஆனால் அதற்கான பொருட்கள் வராமல் ஏமாற்றப்பட்டார்.புதுச்சேரியில் தொடர்ந்து, 7 பேரிடம் மொத்தம் ரூ. 67.61 லட்சம் பணத்தை மோசடி செய்து வரும் ஆன்லைன் மோசடி கும்பலை பற்றி, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.