எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கருத்தரங்கம்
புதுச்சேரி : புதுச்சேரி பள்ளி கல்வித் துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியன இணைத்து எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான மத்திய மற்றும் மாநில கல்வி உதவித்தொகை திட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கருத்தரங்கை கல்வித்துறையில் நடத்தின.கருத்தரங்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி நலத்துறை செயலர் முத்தம்மா துவக்கி வைத்தார். பள்ளி கல்வித்துறையின் செயலர் பிரியதர்ஷினி வரவேற்றார். இணை இயக்குனர் இளங்கோவன், முன்னிலை வகித்தார்.இதில் மத்திய கல்வி உதவி திட்டங்களான என்.எஸ்.பி., மற்றும் மாநில கல்வி உதவித் தொகை திட்டமான 'முழுகல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மற்றும் பிற கல்வி உதவித் திட்டங்கள் பற்றிய விளக்கங்கள், மற்றும் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.எந்தெந்த உதவித்தொகை யார் யாருக்குப் பொருந்தும் என விளக்கப்பட்டது. மேலும் ஏழை, எளிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வித்தரத்தை வலுபடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துவரும் பல்வேறு, திட்டங்கள் மற்றும் அவர்களுக்கான தங்கும் விடுதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கருத்தரங்கில் இணை இயக்குனர் சிவகாமி, துணை இயக்குனர் கவுரி, முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், துணை இயக்குனர் ராமச்சந்திரன், துணை வட்ட ஆய்வாளர் அனிதா, சாந்தி வாஞ்சிநாதன், திருவரசன், புவியரசன் ஆகியோர் பங்கேற்றனர். கண்காணிப்பாளர் தேவி நன்றி கூறினார்.