| ADDED : நவ 13, 2025 06:52 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; அப்பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடைக்கு நேற்று மதியம் வந்த வாலிபர் ஒருவர் செருப்பு வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றார். கடையில் இருந்த பெண் ஊழியர், கடை உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோர் செருப்புக்கான பணத்தை கேட்டனர். ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையை சேதப்படுத்தி, சென்றார். ராஜேந்திரன் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் போலீசார் கடைக்கு விரைந்து விசாரித்தனர். கடையை உடைத்தவர் கோட்டக்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி முகமது உசேன், 27, என்பது தெரியவந்தது. கோட்டக்குப்பம் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர், மீது முத்தியால்பேட்டை போலீசில் 2 கொலை முயற்சி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்த சிவசங்கரன் எம்.எல்.ஏ., சூறையாடப்பட்ட கடையை பார்வையிட்டார்.