உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனைகளில் மருந்துகள்... தட்டுப்பாடு; டெண்டர் அமலுக்கு வராததால் சிக்கல்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள்... தட்டுப்பாடு; டெண்டர் அமலுக்கு வராததால் சிக்கல்

புதுச்சேரி: அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் அலைக்கழிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அரசின் சுகாதாரத்துறையின் கீழ், 4 அரசு மருத்துவமனைகள், ஒரு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 85 கிளை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிளை சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகள், ஊசிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் நவீன கருவிகள் அரசின் மத்திய கொள்முதல் குழு சார்பில், ஆண்டுதோறும் டெண்டர் விட்டு மருந்துகள் கொள்முதல் செய்து, மருத்துவமனைகளுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் கடந்த 2021-22 நிதி ஆண்டிற்கு பிறகு புதிய டெண்டர் விடாமல், பழைய ஒப்பந்தத்தையை புதுப்பித்து மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. அந்த நிறுவனம் பழைய விலைப் பட்டியல் அடிப்படையில் மருந்தை தர மறுத்ததை தொடர்ந்து இந்த நிதி ஆண்டிற்கு மருந்துகள் சப்ளை செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் டெண்டர் கோரப்பட்டது. அதில் டெண்டர் கோரிய நிறுவனத்தின் மருந்துகளின் தரம் மற்றும் விலை விபரங்களை ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட போதிலும், நிர்வாக நடைமுறைகள் முடிந்து ஒப்பந்தம் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பான கோப்பு தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, மனநலம், கிட்னி பாதிப்பு நோயாளிகளுக்கு மாதம் தோறும் கொடுக்க போதிய மருந்து இல்லாத காரணத்தினால், 10 நாட்களுக்கு ஒருமுறை சென்று மருந்து வாங்க வேண்டியுள்ளது. அதேபோன்று, உடல்நலம் குன்றி அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய 'ஹியூமன் அல்பமின்', 'இமினோ குளோபின்' போன்ற மருந்துகள், மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிக்கு உடனடியாக அளிக்க வேண்டிய 'ரெக்டிபேஷ்' ஊசி, பிரசவ வலியால் துடிப்பவர்களுக்கு கர்ப்ப பை வாய் திறப்பதற்கு பயன்படுத்தப்படும் 'செர்விபிரிம்' போன்ற மருந்து கள் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், குறை பிரசவத்தில் பிறந்து, இன்க்பெட்டரில் வைத்து பராமரிக்கப்படும் சிசுக்களுக்கு அளிக்க வேண்டிய 'சர்பெக்டன்ட்' மருந்து கடந்த 4 மாதங்களாக தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நோயிற்கு உரிய மருந்துகள் இல்லாததால், இருப்பில் உள்ள மருந்துகளை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையை மாற்றிட, கடந்த ஜனவரி மாதம் விடப்பட்ட டெண்டரை இறுதி செய்து, மருந்துகள் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை வெளியிட முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வே ண்டும். நோயாளிகள் அதிகரிப்பால் மருந்து தட்டுப்பாடு இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவ்வப்போது மருந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருப்பினும், உடனுக்குடன் மருந்துகள் வாங்கி தரப்படுகிறது.

கட்டு போடுவதில் சிக்கல்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பஞ்சு (காட்டன்) இல்லாததால், கட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. உடன் வேறு வழியின்றி ஊழியர்கள், சுற்று வட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பஞ்சு பண்டல்களை வாங்கி வந்து சமாளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை