சிறப்பு சட்டசபை கூட்டப்படும் சபாநாயகர் செல்வம் தகவல்
புதுச்சேரி : என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் சபாநாயகரை சந்தித்து சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டி கடிதம் கொடுத்தனர்.இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது: என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் மாநில மக்களுக்கு தேவையான அத்தனை உதவிகள் மற்றும் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உடனடியாக சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும் என அனைத்து எம்.எல். ஏ.,க்களும் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்துள்ளனர்.இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் கலந்து ஆலோசித்து, உடனடியாக சட்டசபையை கூட்டுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்துள்ளேன். இதற்காக, முதல்வரை சந்தித்து விரைவில் முடிவேடுப்பேன். சட்டசபையை கூட்டுவதற்கு கவர்னர் ஒப்புதல் பெறப்படும். மாநில அந்தஸ்து தொடர்பாக முதல்வரை டில்லிக்கு அழைத்து செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், முதல்வருடன் அனைத்து எம்.எல்.ஏ.,களையும் டில்லிக்கு அழைத்து செல்ல வாய்ப்புகள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 5 ஆண்டு கால பதவியை முழுவதுமாக பூர்த்தி செய்யும். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. கவர்னருக்கும், முதல்வருக்கும் எவ்வித கருத்து மோதலும் இல்லை என்றார்.அமைச்சர் லட்சுமிநாராயணன் பேட்டி:மாநில அந்தஸ்து பெறுவதற்காக எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சேர்ந்து சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டி கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.