உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மெத்தன அதிகாரிகள் மீது நடவடிக்கை சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை

மெத்தன அதிகாரிகள் மீது நடவடிக்கை சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை

புதுச்சேரி: மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எனது மணவெளி தொகுதியை சேர்ந்த சின்ன வீராம்பட்டினம் அரசு ஆரம்ப பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதுதொடர்பாக கடந்த 14.9.2024 அன்று கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. புதிய கட்டடம் கட்டிய பிறகு மீண்டும் பள்ளி அங்கு இடமாற்றம் செய்யப்படும்.இதனை அறியாமல், வைத்திலிங்கம் எம்,பி., பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, ரெஸ்டோபார் அமைக்க அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இருமுறை முதல்வராக இருந்தவர் பொறுப்புடன் பேச வேண்டும். அரசு கட்டடத்தில் ரெஸ்டோபார் அமைக்க முடியுமா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.மத்திய குழுவிடம் அனைத்து கட்சிகளும் மனு அளித்தனர். ஆனால் காங்., கட்சியினர் இப்போதுதான், கவர்னரை சந்தித்து மனு கொடுக்கின்றனர்.மழை சேத மதிப்பு அறிக்கை தயாரிக்க அதிகாரிகள் தாமதமாக்கிவிட்டனர். அதனால், முதல்கட்ட நிவாரணம் உடனடியாக கிடைக்கவில்லை. இருப்பினும், மத்திய அரசு நிவாரணம் வழங்கும்.சில அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். அவர்களை, முதல்வர் கருணையோடு மன்னித்து வருகிறார். இதேநிலை தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கோப்புகளுக்கு ஒரு வாரத்தில் முடிவெடுக்க கவர்னர் உத்தரவிட்டும், அதிகாரிகள் தாமதிக்கின்றனர். அரசு அலுவலகங்களை, கவர்னர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளார். அதிகாரிகள் தங்களை திருத்திக் கொண்டு, மக்களுக்காக கோரப்படும் கோப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை