உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்து விற்பனை விவகாரம்; விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு

 போலி மருந்து விற்பனை விவகாரம்; விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு

புதுச்சேரி: போலி மருந்து குறித்து, பிரபல, 'சன் பார்மா' நிறுவனம் அளித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். மதுரையை சேர்ந்த ராஜா வள்ளியப்பன், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து, நாடு முழுதும் விற்பனை செய்தது தெரியவந்தது. போலி மருந்துகள் தயாரித்த கிடங்குகள் மற்றும் கம்பெனியில் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், மூல பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்து, ' சீல்' வைத்தனர். தொடர்ந்து, புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த போலி மருந்துகளின் தலைமையகமான, ' பார்ம் ஹவுஸ்' மற்றும் ' ஸ்ரீ சன் பார்மா' அலுவலகம் மற்றும் கிடங்குகளில் சோதனை நடத்தி, சீல் வைத்தனர். நேற்று முன்தினம், புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் உள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜா வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, போலி மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்கள் வாங்கியது, போலி மருந்துகள் விற்றதற்கான ஆவணங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வைர நகைகள், தங்க நகைகள், 20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இ து வரை, 200 கோடிக்கு மேல் போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 500 கோடிக்கு மேலாக சொத்துகளை முடக்கி சீல் வைத்துள்ளனர். இந்நிலையில், கவர்னர் கைலாஷ்நாதன், போலி மருந்து விவகாரத்தில் முழுமையாக விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். அதன்படி, டி.ஜி.பி., ஷாலினி சிங் பரிந்துரையின்படி, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., நல்லாம் கிருஷ்ணராய பாபு தலைமையில், 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நேற்று லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., தலைமையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ