உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று முதல் துவக்கம்! ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக படிவம் வழங்கி தகவல் சேகரிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று முதல் துவக்கம்! ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக படிவம் வழங்கி தகவல் சேகரிப்பு

புதுச்சேரி: தேர்தல் ஆணைய உத்தரவின்படி புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று முதல் துவங்குகிறது. இதுகுறித்து புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நிருபர் களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் மட்டுமே இடம் பெறும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இப்பணி புதுச்சேரியில் இன்று 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதிவரை நடக்கிறது. அதனையொட்டி, மாநிலத்தில் உள்ள 10.21 லட்சம் வாக்காளர்களுக்கு, 962 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் உதவியுடன் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி தகவல் சேகரிக்க உள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும். அதில் ஆட்சேபனை மற்றும் உரிமைக் கோரல் ஜனவரி 8 ம் தேதிவரை பெறப்படும். இத்தகவல்கள் ஆய்வு செய்து, பிப்ரவரி 7 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. படிவம் வழங்கல் இன்று துவங்கும் சிறப்பு தீவிர திருத்த பணியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், முன்னதாக அச்சிடப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை ஒப்புகை சீட்டுடன் வழங்குவர். பூர்த்தி செய்யும் முறை வாக்காளர்கள், கணக்கெடுப்பு படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த படிவத்தில் பிறந்த தேதி, மொபைல் போன், தந்தை, தாய் அல்லது மற்றும் இணையர் பெயர்கள் மற்றும் போட்டோ ஆகியவற்றை கட்டாயம் பதிவிட வேண்டும். விருப்பம் இருப்பின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் விபரங்களை பதிவிடலாம். புதிய வாக்காளர் பதிவு புதிய வாக்காளர் அல்லது புதிதாக வெளியூர்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களாக இருப்பினும் ஓட்டுச் சாவடி அலுவலரிடமே முறையே படிவம் 6 மற்றும் 8யை பெற்று ஒப்புதல் படிவத்துடன் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வாக்காளர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அனைவரது பெயர்களும் சேர்த்து டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கணக்கெடுப்பு படிவத்துடன் எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவையில்லை. ஆவணங்கள் தேவை கடந்த சிறப்பு தீவிர திருத்தப்பட்டியலில் பெயர் பொருந்தாத வாக்காளர்கள் மற்றும் டிசம்பர் 9ம் தேதிக்கு பிறகு பெறப்படும் ஆட்சேபனை மற்றும் உரிமைக் கோரலின் பேரில் கள ஆய்விற்கு வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கேட்கும் 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் வாக்காளர்கள் தங்களது பெயர், உறவினர்களின் பெயர்களை முந்தைய வாக்காளர் பட்டியலில் விபரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுதொடர்பான உதவிக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். கள ஆய்விற்கு பின் பிப்ரவரி 7 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு என கலெக்டர் அலுவலகத்திலும், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பிரத்யோக கட்டுப்பாட்டு மையம் மற்றும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களுக்கு கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950யை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். ஆன்லைன் வசதி வாக்காளர்கள் தங்கள் விபரங்களை நேரடியாக voters.eci.gov.inஎன்ற இணையதளத்தின் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். திருத்தப்பணி அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் 962 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் 1,376 ஓட்டுச்சாவடி முகவர்கள், 60 வாக்காளர் பதிவு மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள், 2 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சமர்ப்பிக்க வேண்டிய ஆவணஙகள் 1. மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை. ஓய்வூதிய ஆணை 2. மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கி, அஞ்சலகம், எல்.ஐ.சி., மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை. 3. தகுதி வாய்ந்த அதிகாரி வழங்கிய பிறப்பு சான்றிதழ். 4. பாஸ்போர்ட் 5. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள், பல்கலைக்கழககங்கள் வழங்கிய கல்வி சான்றிதழ் 6. வன உரிமைச் சான்றிதழ். 7. தேசிய குடிமக்கள் பதிவேடு 8. உள்ளாட்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேடு 9. அரசு வழங்கிய நிலம் அல்லது வீடு ஓதுக்கீட்டு சான்றிதழ் 10. ஆதார் கார்டு 11. தகுதி வாய்ந்த அதிகாரி வழங்கிய ஜாதி சான்றிதழ். 12. 1.7.25 அன்று தகுதி தேதியாக கொண்டு வெளியிட்ட பீகார் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் நகல் 13. தகுதி வாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிட சான்றிதழ். ஆட்சேபனை தெரிவிக்க வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தலில் ஆட்சேபனை இருப்பின், வாக்காளர் பதிவு அலுவலரிடம் முறையிடலாம். அதில் ஆட்சேபனை இருப்பின் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம், இறுதியாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். வாக்காளர் தகுதி இந்திய குடிமகனாகவும், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், சம்மந்தப்பட்ட தொகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். எந்த சட்டத்தின் படியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை