உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில பணியாளர் தேர்வு முகமை அமைக்க... அரசாணை வெளியீடு; இளைஞர்கள் நீண்ட நாள் ஏக்கத்திற்கு விடிவு

மாநில பணியாளர் தேர்வு முகமை அமைக்க... அரசாணை வெளியீடு; இளைஞர்கள் நீண்ட நாள் ஏக்கத்திற்கு விடிவு

புதுச்சேரி: அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப முதல் முறையாக புதுச்சேரி பணியாளர் தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி, 'குருப்-சி' மற்றும் 'குரூப்-பி' அரசிதழ் பதிவு பெறாத பதவிகளை அரசே உடனடியாக நிரப்பி கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் பணியாளர் தேர்வாணையம் உள்ளன. இதனால் ஆண்டிற்கு லட்சக்கணக்கான அரசு பணியிடங்கள் உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஆனால், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அப்படி ஏதும் இல்லை. எந்த அரசு பணியிடங்களை நிரப்பினாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கதவை தட்டி முன் கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும். அப்படி மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் கிடைத்து அறிவிப்பு வெளியிட்டாலும் பணியாளர் தேர்வு ஆணையம் இல்லாததால், பல மாதங்கள் கழித்து தான் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக இருந்தாலும் உடனடியாக நிரப்ப முடியவில்லை. இது இளைஞர்களிடம் விரக்தியை ஏற்படுத்தியது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு, மாநில தேர்வாணையம் வாய்ப்பில்லை. அதனால், புதுச்சேரிக்கு என்று தனியாக துணை பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்து, இதற்கான பூர்வாங்க பணிகளை முடுக்கிவிட்டது. இது தொடர்பான கோப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தந்துள்ள சூழ்நிலையில் பணியாளர் தேர்வாணையம் புதுச்சேரியில் முதல் முறையாக ஏற்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி பணியாளர் தேர்வு முகமை என்ற பெயரில் இது ஏற்படுத்தப்பட்டு, இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டில்லி யூனியன் பிரதேசத்தில் துணை பணியாளர் தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி, புதுச்சேரியில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு தலைமை செயலர் சேர்மனாகவும், நிதி செயலர், உறுப்பினராகவும், பணியாளர் துறை செயலர் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், சார்பு செயலர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக அமைகின்ற பணியாளர் தேர்வு முகமை புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-பி மற்றும் குரூப் சி மற்றும் அரசு பணியிடங்களில் அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களை மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்காமல் உடனுக்குடன் இனி நிரப்பும் முடியும். இதேபோல் காலத்திற்கேற்ப நியமன விதிகளை திருத்தி கொள்ள முடியும். இந்த மூன்று வகை அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகள் அனைத்தும் 100 மதிப்பெண்ணிற்கு 2 மணி நேரம் என்ற அடிப்படையில் இனி நடத்தப்படும். இப்பதவிகளுக்கான போட்டி தேர்வு இடைநிலை, மேல்நிலை, பட்டதாரி என மூன்று நிலைகளில் நடத்தப்பட உள்ளது. குரூப்-சி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த இடைநிலை போட்டி தேர்வு 100 மதிப்பெண்ணிற்கு 10ம் வகுப்பு தரத்தில் கொள்குறி வகையில் கேள்விகள் இருக்கும். குரூப்-சி ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான போட்டி தேர்வை, முதல் தாள், இரண்டாம் தாள் என இருதாள் கொண்டதாக நடத்தப்படும். இந்த போட்டி தேர்வை பிளஸ் 2, டிப்ளமோ படித்த மாணவர்கள் எழுதலாம். குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் கொண்டதாக 100 மதிப்பெண்ணிற்கு கொள்குறி வகையில் நடத்தப்படும். இந்த போட்டி தேர்வில் பொது பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 30 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 20 ஆகவும், ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், இ.டபுள்யூ.எஸ்., பிரிவினருக்கு 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியாளர் தேர்வு முகமை உடனடியாக செயல்பாட்டிற்கு வருவதால், அரசு துறைகளின் காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Saran
ஆக 21, 2025 11:52

Very sad news is these government jobs are going to other states people particularly to Tamil nadu candidates. The Government must verify thier certificats and documents properly. If anyone migrated to Pondichery, thier children can't be a citizen of Pondicherry eventhough they are born and brought up at Pondicherry.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை