மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
12-Nov-2024
புதுச்சேரி,: புதுச்சேரியில் வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த மாணவர் காங்., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.பூமியான்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள். தி.மு.க., பிரமுகர்; டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மகன்கள் சிவபிரகாஷ், சூர்யமூர்த்தி. பட்டதாரியான இருவரும் தந்தையுடன் தொழில் செய்து வருகின்றனர். இருவரும் மாணவர் காங்., நிர்வாகிகள்.பேனர் வைப்பதில் சிவபெருமாள் தரப்பிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த முரளி மற்றும் விஜய் ரசிகரான சாரங்கபாணி தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது.சிவபெருமாள் வீட்டிற்குள் புகுந்து தாக்கிய சாரங்கபாணி, முரளி உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, முரளியை கைது செய்தனர்.இந்நிலையில், சூரியமூர்த்தி, 25, தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார், பூமியான்பேட்டையில் மாரியம்மன் கோவில் அருகில் நின்றிருந்த சூரியமூர்த்தியை பிடித்து சோதனை செய்தனர். அதில், 2 ஆப்பிள் மொபைல்போன் உட்பட 4 மொபைல்போன்கள், கேரள லாட்டரி சீட்டின் கடைசி 3 நம்பர்கள் எழுதப்பட்ட டைரி சிக்கியது. விசாரணையில், கேரளாவில் தினசரி குலுக்கல் நடக்கும் நம்பர்களில் 3 நம்பர்களை மட்டும் தலா ரூ. 30க்கு வாட்ஸ்ஆப் குழு வின் ஏஜென்சி மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். கேரளாவில் பரிசு விழுந்த நம்பரின் கடைசி 3 நம்பரும், புதுச்சேரி நபர் வாங்கி இருந்தால் ரூ. 15 ஆயிரம், 2 நம்பர் இருந்தால் ரூ. 500, கடைசி ஒரு எண் இருந்தால் ரூ. 50 என பரிசு கொடுத்து வந்தார். ஈரோட்டைச் சேர்ந்த பூபதி என்பவர் மூலம் புதுச்சேரியில் லாட்டரி மொத்த வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. லாட்டரி விற்பனை மூலம் தினசரி ரூ. 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். இதன் மூலம் கிடைத்த வருவாயில், மாணவர் காங்., கட்சியில் இணைந்து கொண்டு ஆப்பிள் போன்கள், கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. சூரிய மூர்த்தியை போலீசார் கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
12-Nov-2024