ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரியில் பரிசுகளை அள்ளிய மாணவ, மாணவிகள்
புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த கோனேரிக்குப்பத்தில் அமைந்துள்ள ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான திறனாய்வு தேடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தனியார் தொலைக்காட்சியின் அரசியல் நெறியாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹெச்.சி.எல். நிறுவனத்தின் மனிதவள மேலாளர் வினோத், 'வேலைவாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக, கலை அறிவியல் கல்லுாரியில் இருந்து 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்' என தெரிவித்தார். ஐ.ஆர்.ஐ.எஸ்., சாப்ட்வேர் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஹரிஹரன் சுப்பிரமணியன் பேசும்போது, ஆதித்யா கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது கம்பெனியில் இன்டர்ன்ஷிப் வழங்குவதாக கூறினர். குழு மற்றும் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.இந்த ஆண்டு ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என ஆதித்யா குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டது.