எம்.பி.பி.எஸ்.,சில் போலி சான்றிதழ் மாணவர்களை நீக்க பரிந்துரை: கடுமையான விதிமுறை வந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு
புதுச்சேரி: புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ சீட்டுகளை போலி சான்றிதழ் கொடுத்து அபகரிக்க முயன்ற பிற மாநில மாணவர்களை சென்டாக் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சென்டாக் எம்.பி.பி.எஸ்.,கலந்தாய்வில் பிறமாநில மாணவர்கள் இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரி மாணவர்களின் இடங் களை அபகரிக்க முயல்வதும்,அதற்கு தீர்வு காணாமல் அரசு திணறி வருவதும் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது.இந்தாண்டும், இரட்டை குடியுரிமை பிரச்னை வெடித்தது. போலி சான்றிதழ்களை கொடுத்து புதுச் சேரி மாணவர்களின் சீட்டுகளை அபகரிக்க விண்ணப்பித்துள்ளதாக பெற்றோர், மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தனர். அதை தொடர்ந்து சுகாதார துறை சென்டாக் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்து வந்தது.இதில் 8மாணவர்கள் போலி சான்றிதழ்களுடன் அதாவது இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரியிலும் விண்ணப்பித்துள்ளது அம்பலமாகி உள்ளது.இம்மாணவர்களை தரவரிசை பட்டியலில் இருந்து நீக்க சுகாதாரத் துறை, சென்டாக்கிற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, ஜிப்மரில் புதுச்சேரி மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ்., சீட்டினை பறிக்கும் வகையில் 11 பிற மாநில மாணவர்கள் விண்ணப்பித்து, அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ சீட்டுகளை குறி வைத்து பிற மாநில மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் தடுக்க முடியவில்லை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தகவல் குறிப்பேட்டில், பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தில் வசித்து இருந்தாலும் அவர்கள் குடியுரிமை கேட்க முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான நீட் தேர்வு எழுதும்போது, பிற மாநிலங்களை குறிப்பிட்டால், தமிழகத்தில் குடியுரிமை கோர முடியாது என்றும், பிற மாநில குடியுரிமையுடன் அம்மாநில கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க வில்லை என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும் என்றும் இந்த விதிமுறை மீறினால் அவர்களுடைய மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் எம்.பி. பி.எஸ்., மாணவர் சேர்க்கையின்போது தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்படுவதுடன் இரட்டை குடியுரிமை சம்பந்தமாக உறுதிமொழி பெறப்படுகிறது. வேறு எந்த மாநிலத்தில் குடியுரிமை பலனை பெறவில்லை என செயல் நடுவர், நோட்டரி பப்ளிக் முன்னிலையில் கையெழுப்பமிட்டு மாணவர் சேர்க்கையில்போது உறுதி மொழிபடிவம் கொடுத்தால் மட்டுமே எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில் பரிசீலனை செய்யப்படுகிறது. சண்டிகாரில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில் இரட்டை குடியுரிமை சம்பந்தமாக தகவல் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளதுடன், மாணவரும், பெற்றோரும் பிற மாநிலங்களில் குடியுரிமை இல்லையென உறுதிமொழி படிவம் கொடுத்தால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறது.இரட்டை குடியுரிமை கண்டறியப்பட்டால் இம்மாநிலங்களில் அடுத்த நிமிடமே மாணவர் சேர்க்கை ரத்தாகிவிடும் நடைமுறை உள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக புதுச்சேரியில், சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை இரட்டை குடியுரிமை சம்பந்தமாக இன்னும் எந்த முடிவெடுக்காமல் உள்ளது.இது சம்பந்தமாக தகவல் குறிப்பேட்டிலும் குறிப்பிடுவதில்லை. பொத்தாம் பொதுவாக விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தகவல்களும் உண்மையானது என 20 ரூபாய் இ-ஸ்டாம்புடன் உறுதி மொழிபடிவம் மட்டுமே வாங்கப்படுகின்றது. இது பிற மாநில மாணவர்கள் புதுச்சேரி மாணவர்களின் சீட்டுகளை பறிக்க முயல்வதை எந்த விதத்திலும் தடுக்க முடியவில்லை.எனவே, மாநில அரசு விரைவில் கேபினட்டினை கூட்டி இரட்டை குடியுரிமை குறித்து தெளிவாக முடிவெடுக்க வேண்டும். இந்த இரட்டை குடியுரிமை மூலம் புதுச்சேரி மாணவர்கள் சீட்டுகள் பறிபோவதை தடுக்க மாநில அரசு கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.புதுச்சேரி மாணவர் பெற்றோர் சங்க தலைவர் பாலா கூறும்போது, இரு மாநிலங்களிலும் குடியுரிமை வைத்துள்ள பிற மாநில மாணவர்கள் புதுச்சேரி மாணவர்களின் சீட்டுகளை பறிக்க முயன்றுள்ளனர். இதனை புதுச்சேரி அரசும், சுகாதார துறை தடுத்து நிறுத்தி, தரவரிசை பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில மாணவர் களின் உரிமையை நிலைநாட்டிய புதுச்சேரி அரசுக்கு நன்றி என்றார்.