போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய பாசிக் ஊழியர்கள் அலுவலகத்தில் காத்திருந்ததால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓராண்டுகளுக்கு மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாசிக் ஊழியர்கள் நேற்று பணிக்கு திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் 1986ம் ஆண்டு பாசிக் நிறுவனம் துவங்கப்பட்டு, விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் மானியம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், ஆட்கள் திணிப்பு, நிர்வாக சீர்கேடு காரணமாக நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.இதனால், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 17 ம் தேதி முதல் பாசிக் நிறுவன ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட துவங்கினர். ஆனால், அரசு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் எந்தவித பேச்சுவார்த்தை நடத்தாமலும், சம்பளம் வழங்காமலும் இருந்து வருகிறது. இதனால், ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே, பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடந்த 23ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், நேற்று (27ம் தேதி) முதல் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்புவது, சம்பளம் தொடர்பான ஊழியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, பாசிக் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, நேற்று பணிக்கு வந்தனர். ஆனால், ஊழியர்களுக்கு வேலை வழங்க பாசிக் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால், தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் எதிரே காத்திருந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.