| ADDED : செப் 10, 2026 05:51 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு மூன்று நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்யலாம். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை. மனுதாக்கல் செய்வதற்கான ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே வாங்கி சென்றனர். இரண்டாவது நாளான நேற்று, அமாவாசை தினம் என்பதால், மனு தாக்கல் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், சுயேச்சைகள் கூட மனு தாக்கல் செய்யவில்லை. எட்டு மனு தாக்கல் விண்ணப்பங்கள் மட்டுமே வாங்கி சென்றனர். 9ம் தேதி துவங்கிய மனுதாக்கல், வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அமாவாசைக்கு மறு நாளான பிரதமை தினமான இன்று மனுதாக்கல் செய்வார்களா என்பது சந்தேகமே. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையாக வரும் 12ம் தேதி வங்கிகள் விடுமுறை தினம் என்பதால், மனுத்தாக்கல் செய்பவர்கள் டிபாசிட் செய்ய முடியாத காரணத்தினால், அன்று மனுதாக்கல் கிடையாது. தொடர்ந்து 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அரசு விடுமுறை தினம் வருவதால் மனு தாக்கல் செய்ய முடியாது. அதனால் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை, 16ம் தேதி புதன்கிழமை மதியம் 3:00 மணியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது. கடைசி நாளான புதன்கிழமை நல்ல நேரத்தில் அன்றே அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.