புதுச்சேரிக்கு பல்லக்கில் வந்த நாணய உரிமை 21 குண்டுகள் முழங்க ராஜ மரியாதையுடன் வரவேற்பு
புதுச்சேரியில் பிரெஞ்சியர் வணிகத்தில் வலுவாக கால்தடம் பதித்த பிறகு தங்களுக்கென தனி நாணயத்தை அச்சடிக்க முயற்சி எடுத்தனர். 1721-23ம் ஆண்டு காலக்கட்டத்தில் கவர்னராக இருந்த லெனுவார் புதுச்சேரியிலேயே நாணயங்களை அச்சடிக்க பெரும் முயற்சி எடுத்து பிள்ளையார் சுழியிட்டார்.அவரின் பல கட்ட முயற்சிக்கு பிறகு முகலாய சக்கரவர்த்திக்கும், நவாபுக்களுக்கு மட்டுமே இருந்த இந்த உரிமை புதுச்சேரிக்கு 1736ல் கிடைத்தது. இந்த நாணய அச்சடிக்கும் உரிமை ஆர்க்காட்டு நவாப் தோஸ்தலிக்கானால் புதுச்சேரிக்கு காசுக்கு விற்கப்பட்டது. இதற்காக ஆர்க்காட்டு நவாப் தோஸ்தலிக்கானுக்கு 80 ஆயிரம் ரூபாய், அவரது நெருங்கி நண்பர்களுக்கு 25 ஆயிரம், இமாம் சாய்புக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரப்பட்டது, எனவும் வரலாற்று பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.இருப்பினும், நாணயம் அச்சடிக்க பெரும் முயற்சி எடுத்த கவர்னர் லெனுவார் மாற்றலாகி, அவருக்கு பதிலாக புதிய கவர்னராக துய்மா பொறுப்பேற்றார். அதை தொடர்ந்து நவாப்பின் கோட்டையும் கருவூலம் இருந்த ஆலம்பரையில் இருந்து நாணயம் அச்சடிக்கும் உரிமையை தலைமை துபாசி கனகராய முதலியார் 10.09.1736ல் பல்லக்கில் வைத்து புதுச்சேரிக்கு கொண்டு வந்தார்.நீண்ட நாள் கனவு நிறைவேறியதால் பிரெஞ்சியர்கள் சும்மா இருப்பார்களா.. பல்லக்கில் வந்த நாணய உரிமைக்கு 21 பீரங்கி குண்டுகள் முழங்க ஒட்டு மொத்த புதுச்சேரியும் குலுங்க ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.அதன் பிறகு நாணயங்களை அச்சடிக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து வெள்ளி கட்டிகளும் கப்பலில் கொண்டு வரப்பட்டன. அப்படி கொண்டு வந்தபோது ஒவ்வொரு கப்பலுக்கு 50,000 வராகன் மதிப்புள்ள வெள்ளி நவாப்புக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.புதுச்சேரி நாணயம் அச்சடிக்கும் உரிமை பெற்ற கையோடு அச்சுக்கூடம் ஒன்று புஸ்ஸி வீதி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. அந்த கட்டடத்தின் கிழக்கில் உள்ள மருத்துவமனை நோக்கி செல்லும் சாலையை தங்க சாலை என்றும், புஸ்ஸி வீதி பெரிய வாய்க்கால் மேல் உள்ள பாலத்தை தங்கசாலை பாலம் என்றும் அழைத்து வந்தனர்.புதுச்சேரியில் நாணயங்களை அச்சடிக்கும் முயற்சியை கவர்னர் லெனுவார் மேற்கொண்டாலும் அவர் மாற்றலாகி சென்றதால் புதுச்சேரியில் தங்கசாலை நிறுவிய பெருமை அவருக்கு அடுத்த வந்த கவர்னர் துய்மாவிற்கே கிடைத்தது.கவர்னர் துய்மா நாணயங்களை அச்சடித்தற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு செயின்ட் மிேஷல் பதக்கம் கொடுத்து பிரபு அந்தஸ்திற்கு உயர்த்தியது. இதன் மூலம் அவர் அரச குடும்பத்துடன் திருமண பந்தம் கொள்ளுவதற்கு உரிமை பெற்றார் என்பது வேறு கதை.