புதுச்சேரியை தென்னிந்தியாவின் ஏற்றுமதி மையமாக மாற்றுவதே அரசின் நோக்கம் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்
புதுச்சேரி: தென்னிந்தியாவில் புதுமை, கல்வி மற்றும் தொழில்துறைக்கான மையமாக புதுச்சேரி வேகமாக வளர்ந்து வருகிறது என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார். இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி பிப்டிக் நிறுவனம் சார்பில் சர்வதேச விற்போர் - வாங்குவோர் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டிலில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த, கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதவாது: இந்தியாவில் இன்றுள்ள 6.3 கோடிக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், 11 கோடி பேருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம், ஏற்றுமதியில் 45 சதவீதம் பங்களிக்கின்றன. 'மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார் பாரத்' போன்ற முயற்சிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான நிலப்பரப்பை கூட்டாக மாற்றியமைத்து போட்டியிடவும், ஒத்துழைக்கவும், புதிய சந்தையை வெல்லவும் உலகளாவிய தளத்தை வழங்கியுள்ளன. இந்த சர்வதேச விற்போர், வாங்குவோர் சந்திப்பு நிகழ்ச்சி இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை சர்வதேச வாங்குபவர்களுடன் நேரடியாக இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த முயற்சியாகம். இந்திய பாரம்பரியம் மற்றும் பிரெஞ்சு பாராம்பரியத்தின் தனித்துவமான கலவையுடன், தென்னிந்தியாவில் புதுமை, கல்வி மற்றும் தொழில்துறைக்கான மையமாக புதுச்சேரி வேகமாக வளர்ந்து வருகிறது. புதுச்சேரி அரசு, சிறு, குறு மற்றம் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்துடன் இணைந்து, குறிப்பாக ஜவுளி, கைவினைப் பொருட்கள், தோல், உணவுப் பதப்படுத்துதல், கடல் பொருட்கள் மற்றும் சுற்றுலா சேவைகள் போன்ற துறைகளில் தொழில் முனைவோரை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரியில், பிப்டிக் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மற்றும் சமச்சீர் பிராந்திய வளர்ச்சியை உறுதி செய்வதில் சிறு, குறு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து தர அரசு தயாராக உள்ளது. பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான அழைப்பை விடுத்துள்ளார். இந்த தொலைநோக்கு பார்வையை அடைவதில், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஒரு தீர்க்கமான பங்கு வகிக்கும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வைக்கு புதுச்சேரி நிர்வாகம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. புதுச்சேரியை அழகிய சுற்றுலா தலமாக மட்டுமன்றி, தரம், நம்பகத்தன்மை மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற தென்னிந்தியாவின் துடிப்பான ஏற்றுமதி மையமாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்றார்.