ஐ.ஜி.,யிடம் போலீஸ் சீருடையை ஒப்படைக்க வந்த முதியவரால் பரபரப்பு
புதுச்சேரி: போலீஸ் சீருடையை ஐ.ஜி.,யிடம் ஒப்படைக்க குடும்பத்துடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்கு நேற்று குடும்பத்துடன் வந்த முதியவர் ஒருவர், போலீஸ் சீருடையை ஐ.ஜி., அஜீத்குமார் சிங்களாவை சந்தித்து ஒப்படைக்க நேரம் கேட்டார். போலீசார் அவரிடம் விசாரித்தனர்.அவர் கூறியதாவது; எனது பெயர் சுப்புராயன். எனது மகன் பவித்ரன்,27; கொடாத்துார் மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கிறோம். எனது மகனுக்கு சின்ன வயதில் இருந்து போலீஸ் ஆக வேண்டும் என்பது பெரிய கனவு.இதற்காகவே, திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் பிரண்ட்ஸ் ஆப் போலீசில் தன்னார்வமாக பணியாற்றி வந்தார். கடந்த 2022ல் போலீஸ் பணியில் சேர முயற்சி செய்தான். அப்போது காவல் துறையில் இருந்த ஒருவர் பணம் கொடுத்தால் போலீஸ் பணி வாங்கி தருவதாக கூறி 2.35 லட்சம் ரூபாய் பெற்றார். ஒரு இன்ஸ்பெக்டரிடமும் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார்.எனது மகனுக்கு வேலை கிடைத்து விட்டதாக போலீஸ் சீருடையும் கொடுத்தனர். வேலை கிடைத்தது என, நம்பி இருந்தோம். ஆனால் காலதாமதமாக எனது மகன் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.இருவரும் எனது மகனை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக கடந்த பிப்ரவரியில் எனது மகன் பி.ஓ.பி.,யில் புகார் கொடுத்தார். இதன் மீது போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை எனது மகனிடம் இருந்து போலீஸ் சீருடையை வாங்கி கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஐ.ஜி.,யை சந்தித்து ஒப்படைக்க வந்தேன்' என்றார்.தொடர்ந்து, ஐ.ஜி., அஜீத்குமார் சிங்களாவை சந்தித்து போலீஸ் சீருடையை மேடையில் வைத்தார். இதனை கண்ட ஐ.ஜி., போலீஸ் சீருடையை கைப்பையில் வைக்க கூறினார். ஓரிரு தினங்களில் போலீஸ் சீருடையை பி.ஓ.பி., இருந்து சம்மன் போட்டு நேரடியாக போலீசார் பெற்றுக் கொள்வார் என, தெரிவித்தார். இதனையடுத்து ஐ.ஜி.,க்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சுப்புராயன் புறப்பட்டார். இதனால் போலீஸ் தலைமையகத்தில் பரபரப்பு நிலவியது.