உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் சட்ட விரோதமாக நுழையும் வாகனங்களுக்கு போலீஸ் அதிரடி செக்

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் சட்ட விரோதமாக நுழையும் வாகனங்களுக்கு போலீஸ் அதிரடி செக்

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்குள் வாகனங்கள் புகுவதை தடுக்க, கான்பெட் பெட்ரோல் பங்க் அருகே, பேரிகார்டு போட்டு திருப்பி அனுப்ப வேண்டும்.புதுச்சேரி மாநில தொழில் வளர்ச்சிக்காக தட்டாஞ்சாவடியில் கடந்த 1962ம் ஆண்டு தொழிற்பேட்டை 51 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டது. இங்கு 110 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த தொழிற்பேட்டை உள்ளே பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஆனால் இ.சி.ஆரில் இருந்து ராஜிவ் சதுக்கம் வழியாக கோரிமேடு செல்ல வேண்டிய பஸ், வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் இரசக்கர வாகன ஓட்டிகளும் கொக்குபார்க் சந்திப்பு - கலால் துறை வழியாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்குள் புகுந்து தாறுமாறாக கோரிமேடு சாலைக்கு செல்கின்றன.குறுகலான தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலையில் கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் பறப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை நுழைவு வாயிலில் நேற்று மாலை 4:00மணியளவில் போலீசார் அதிரடியாக களம் இறங்கி, நுழைவு வாயிலில் பேரிகார்டுகளை போட்டு அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர்.இதனால் கொக்குபார்க் வழியாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்குள் புகுந்த வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இந்த ஒரு முறை பேரிகார்டுகளை திறந்து விட வேண்டும் என,வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் போலீசார் மனம் இறங்கவில்லை. பேரிகார்டுகளையும் அகற்றவில்லை. அதனால், வாகன ஓட்டிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனால், போலீசார், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பொது வழி அல்ல. இந்த வழியாக வாகனங்கள் புகுந்து செல்வதை அனுமதிக்க முடியாது என கறாராக கூறினர்.அதனால், குறுக்கு வழியில் வந்த வாகன ஓட்டிகள்,வந்த வழியில்திரும்பிச் சென்றனர். ஒருவழியாக மாலை 5:30 மணியளவில் மீண்டும் தொழிற்பேட்டை நுழைவாயிலில் இருந்த பேரிகார்டுகளை போலீசார் விளக்கிக் கொண்டனர்.கொக்குபார்க் சந்திப்பு- கலால் துறை வழியாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்குள் வாகனங்கள் புகுந்து செல்கின்றன. இதனை தடுக்க, கோரிமேடு தொழில்பேட்டை நுழைவு வாயிலில் பேரிகார்டுகளை வைத்து தடுப்பது எந்த வகையிலும் உதவாது.தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள கான்பெட் பெட்ரோல் பங்க் அருகே பேரிகார்டு அமைத்து, கொக்குபார்க் சந்திப்பு - கலால் துறை வழியாக தொழிற்பேட்டைக்குள் வரும் வாகனங்களை அப்படியே திருப்பி அனுப்பினால், மட்டுமே தொழிற்பேட்டைக்குள் வாகனங்கள் நுழைவதை தடுக்க முடியும்.மேலும், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் ஒப்புக்கு ஒருநாள் மட்டுமே பேரிகார்டுகளை வைத்து வாகனங்களை தடுக்காமல் நிரந்தரமாகவே கான்பெட் பெட்ரோல் பங்க் அருகே போலீசாரை பேரிகார்டுகளுடன் நியமித்து ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து போலீசார் கூறுகையில்,'தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை உள்ளே பஸ்கள் அனுமதி இல்லை. பெர்மிட் இல்லாத வழித்தடங்களில் பஸ்களை இயக்குவது போக்குவரத்து விதிமுறைமீறல். இது போன்று தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் பஸ்கள் நுழைந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர் விதிமீறலில் ஈடுபட்டால், ேஷாகாஸ் நோட்டீஸ் கொடுத்து, சம்பந்தப்பட்ட பஸ்சின்பர்மிட் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'என்றனர்.

போக்குவரத்து துறை கவனிக்குமா?

தொழிற்பேட்டைக்கு வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள், சரக்குகளை இறக்கிவிட்டு உடனடியாக சென்றுவிட வேண்டும். தொழிற்பேட்டையில் வாகனங்களை நிறுத்தி வைக்க அனுமதி இல்லை. ஆனால் புதுச்சேரியின் வேறு பகுதிக்கு வரும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள், தொழிற்பேட்டையை 'பார்க்கிங்' பகுதியாக கருதி, சகட்டு மேனிக்கு ஆங்காங்கே நிறுத்தி வருகின்றனர். இதனால், தொழிற்பேட்டைக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை வளைவுகளில் திரும்பும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.அதனால், விதிகளை மீறி தொழிற்பேட்டைக்குள் பார்க்கிங் செய்யும் வாகனங்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து, அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

nagendhiran
டிச 22, 2024 18:35

இவனுங்க தொல்லை தாங்கல? சிக்னலில் நிற்பதற்கு பதில்"குறுக்குவழியாக செல்ல இவனுங்க இந்த சாலையை பயன்படுத்துறானுங்க? அதவும் சீறாக எவனும் போவதில்லை?


சமீபத்திய செய்தி