எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி கைது
புதுச்சேரி; புதுச்சேரியில் எம்.எல்.ஏ., மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர். இவர், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் பதவியும் வகிக்கிறார். ஜிப்மர் எதிரில் உள்ள உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில், திலாஸ்பேட்டை ரவுடி ராமு சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி ஆக்கிரமித்து கடை நடத்துவதால் மற்ற வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, சிவசங்கர் எம்.எல்.ஏ.,விடம் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். சிவசங்கர் எம்.எல்.ஏ., ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதை அறிந்த ரவுடி ராமு, சிவசங்கர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, ஜிப்மர் கடை விவகாரத்தில் தலையிட கூடாது என மிரட்டல் விடுத்தார்.ரெட்டியார்பாளையம் போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். ரவுடி ராமுவை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டுமொத்த வியாபாரிகள் சங்கத்தினரும் பேரணியாக சென்று கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.நேற்று முன்தினம் சரணடைந்து, ஜாமின் பெற ரவுடி ராமு புதுச்சேரி நீதிமன்றம் வந்தார். எம்.எல்.ஏ.,வை மிரட்டிய வழக்கு என்பதால், ஜாமின் தர முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனால், நீதிமன்றத்தில் இருந்து ராமு எஸ்கேப் ஆனார். இந்நிலையில் நேற்று காலை ரவுடி ராமுவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
ரகசியம் காத்த போலீஸ்
வீடுகளுக்குள் புகுந்து அண்டா, கோழி திருடிய நபர்களை கைது செய்தால், ரெட்டியார்பாளையம் போலீசார் நெஞ்சை நிமிர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுப்பர். ஆனால், எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி ராமு கைது செய்யப்பட்ட தகவலை கசிய விடாமல் போலீசார் பார்த்து கொண்டனர். கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ரவுடி ராமுவை வரவழைத்த போலீசார், மருத்துவமனை வளாகத்திலே கைது செய்ததற்கான ஆவணம் தயார் செய்து நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர்.