உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொற்று நோய்களும், பஞ்சமும் சேர்ந்து கதிகலங்க வைத்த சோகம்

தொற்று நோய்களும், பஞ்சமும் சேர்ந்து கதிகலங்க வைத்த சோகம்

கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய், 2019-21 காலக்கட்டத்தில் உலகையே ஆட்டிப்படைத்தது. புதுச்சேரியிலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறக்க முடியாது. வீடுகளில் முடங்கி கிடந்தனர். வாழ்வாதாரத்தை தொலைத்தனர். இதுபோன்ற கொள்ளை நோய்கள் இந்த காலத்தில் மட்டும் அல்ல, அந்த காலத்திலும், புதுச்சேரியை தாக்கி புரட்டி போட்டுள்ளது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கொத்து கொத்தாக மனிதர்கள் இறந்துள்ளனர். இதனை நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கப்பிள்ளையும் தனது நாட்குறிப்பில், மழைக்காலங்களிலும், கோடையிலும் பரவிய காலரா, அதாவது வாந்தி பேதி, பெரியம்மை நோய் தாக்கத்தால் உயிர்கள் கொத்து கொத்தாக வீழ்ந்தன. போரை காட்டிலும் நோயால் பலிகள் அதிகம் என்று பதிவிட்டுள்ளார். இப்போது கொரோனா என்றால்,அந்த காலங்களில் காலரா, பெரியம்மை நோயின் வீச்சும், வேகமும் கடுமையாகவே இருந்தது. 1,800க்களில் இந்த நோய்கள் அவ்வப்போது தலைகாட்டி உயிர்களை கொத்து கொத்தாக மடிய வைத்தது. சிறியவர், பெரியவர் என அனைவரையும் காவு வாங்கியது. கால்நடைகளும், பறவைகளும் செத்து வீழ்ந்தன. நோய் பரவலை கட்டுப்படுத்த கொரோனா காலத்தை போன்றே அனைத்து விழாக்களையும், பொதுமக்கள் நடமாட்டத்தையும் அரசு தடை செய்தது. புதுச்சேரியில் 1818 பிப்ரவரி முதல் 1825 பிப்ரவரி வரை காலராவின் வீச்சு கதிகலங்க வைத்தது. 205 ராணுவ சிப்பாய்கள் இறந்துள்ளனர். 1832 முதல் 1849 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் காரைக்காலில் 2,519 பேர் இறந்துள்ளனர். 1855ம் ஆண்டில் புதுச்சேரியில் 544 ஐரோப்பியர்கள் உள்பட 6,522 பேர், 1866 ம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை 66 வெள்ளையரை சேர்த்து 1,650 பேர் பலியாகியுள்ளனர். அப்புறம் 1877 ம் ஆண்டில் கடுமையான பஞ்சத்துடன், இந்நோய்களும் சேர்ந்து கொண்டு உயிர்களுடன் விளையாடியுள்ளன.அந்த ஆண்டு ஜனவரியில் 100 பேரும், ஜூலை-ஆகஸ்ட்டில் 400 பேரும் இறந்தனர். அதைத் தொடர்ந்து டாக்டர் கோலாஸ் ஆய்வு நடத்தினார். தேங்கி கிடக்கும் குப்பைகளும், அசுத்தமான தண்ணீரும் காலராவுக்கு காரணம் என்று அரசுக்கு அறிக்கை அளித்தார். இதனால் புதுச்சேரியை குப்பைகள் இல்லாமல் வைத்திருக்க பிரெஞ்சு அரசு உத்தரவிட்டது. கொத்து கொத்தாக உயிர்கள் மடிந்தபோது 1825ல் கவர்னர் துப்புய் சவ அடக்கங்கள் அனைத்தும் நகருக்கு வெளியே தான் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.1907ல் காலராவால் 1,408 பேர், பெரியம்மையால் 3,496 பேர் மாண்டனர். நோய் தொற்றிய சில நாட்களிலேயே உயிரிழப்பு ஏற்பட்டது. துாய்மையான சூழல் இல்லாதது, அசுத்தமான குடிநீர், நெரிசலான குடியிருப்புகள் தான் அதிக மரணங்கள் ஏற்பட்டதாக டாக்டர் வெலந்தினோவும் அரசுக்கு அறிவித்தார். இதேபோல் 1934-36 ஆண்டுகளிலும் காலராவில் 1121 பேர் இறந்தனர். 1933-35 ஆண்டுகளில் பெரியம்மையினால் 2887 பேர் இறந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பு மருந்துகள் இல்லாத அக்காலத்தில் அந்த அளவிற்கு உயிர்களை காலராவும், பெரியம்மையும் கொத்து கொத்தாக காவு வாங்கி, கதிகலங்க செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி