தலைவன் விருப்பத்தை நிறைவேற்றுவதே உண்மை அடியவனின் கடமை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஸ்ரீமத் ராமாயண நவாக உபன்யாசம் நடந்து வருகிறது.நேற்று ஏழாம்நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் செய்த உபன்யாசம்;சீதா பிராட்டியிடம் செய்தி சொல்லி, செய்தி பெற்ற ஹனுமார், தான் வந்ததை ராவணன் அறியும் வகையில், சில காரியங்கள் பண்ணினார்.துாதன் என்பவன் எதிரியின் பலத்தை அறிய வேண்டும். பலவித உபாயங்களையும் அறிந்திருக்க வேண்டும்.அப்படிப்பட்ட திறமை உள்ளவனால் தான் எந்த காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். தலைவனது விருப்பத்தை நிறைவேற்றுவதே உண்மை அடியவனின் கடமை.ராவணன் கவனத்தைக் கவர வேண்டும் என்று முடிவு செய்து, பிரமாண்டமாக உருவம் எடுத்து, சீதா பிராட்டியிருந்த பகுதியை விட்டு விட்டு அசோக வனத்தின் மற்ற பகுதிகளை அழித்துத் துவம்சம் செய்தார்.ராவணன் மிகுந்த கோபத்துடன் 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பி வானரத்தை அடக்க அனுப்பினான்.கிங்கரப் படைகளை அந்த வானரம் அழித்துவிட்டது என்ற செய்தி ராவணனுக்குக் கிடைக்க, கோபத்தில் வெகுண்டு, இந்திரஜித்தை அனுப்பினான். இந்திரஜித் பலவாறு போரிட்டும் ஹனுமானை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் பிரம்மாஸ்த்திரத்தை அனுமான் மீது ஏவினான். பிரம்மாஸ்திரத்திற்கு மரியாதை கொடுக்க அனுமன் மயங்கியது போல் நடித்தார். பிரம்மாஸ்திரத்தின் பெருமை அறியாமல், கையில் கிடைத்த நார், கயிறு போன்றவற்றால் ஹனுமானைக் கட்டியதால், அந்த கணமே பிரம்மாஸ்திரம் விலகியது.அதன் பின்னும் ஏன் கட்டுண்டு இருந்தார்என்றால், தன்னை ராவணிடம் அழைத்துப் போவார்கள் என்பதால். இந்திரஜித் அவரை ராவணன் சபையில் கொண்டு நிறுத்தினான். ராவணன் அனுமன் யார் என்றறிய விசாரித்தான். நான் சுக்ரீவ ராஜனின் மந்திரி. மஹா பிரபுவான ராமன் வாலியை வதம் செய்து சுக்ரிவனுக்கு மகுடாபிஷேகம் பண்ணினார். சுக்ரிவன் கட்டளையில், நான் ராம துாதனாக வந்துள்ளேன்.உன்னை தன் குழந்தையின் தொட்டிலில் பத்துதலைப் பூச்சி என்று வாலி கட்டிப் போட்டானேநினைவிருக்கிறதா. அந்த வாலியையே வதம் செய்த ராமனின் துாதன் நான். என்று சொல்லியதன் மூலம் ராமபிரானது வில்லாற்றலையும் ராவணனுக்கு உணர்த்தி விட்டார் அனுமான். இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.
உபன்யாசம் நேரம்
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் வரும் 11ம் தேதிவரை தொடர்ந்து உபன்யாசம் நடக்கின்றது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் தினமும் மாலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை உபன்யாசம் செய்கிறார்.