உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் அருகே தனியார் பாரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது கடனாக பீர் கொடுக்காததால் ஆத்திரம்

வில்லியனுார் அருகே தனியார் பாரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது கடனாக பீர் கொடுக்காததால் ஆத்திரம்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே கடனுக்கு பீர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர், பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த பங்கூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பாண்டியன். இவர் அதே பகுதியில் ரெஸ்டோ பார் நடத்தி வருகிறார். இதில் ஐயங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த பொழிலன் கேஷியராக வேலை செய்து வருகிறார்.நேற்று காலை முதல் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க வந்துள்ளார். மாலையில் தான் வைத்திருந்த பணம் தீர்ந்து விட்டதால், கேஷியரிடம் கடனாக ஒரு பீர் பாட்டில் கேட்டுள்ளார். பீர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் வெளியே சென்று, மீண்டும் மாலை 6:30 மணியளவில் பாருக்கு வந்து, பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினார்.இதில் கேஷியருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பார் கண்ணாடி உடைந்தது. பொருட்கள் தீபிடித்து எரிந்ததால் அங்கிருந்த ஊழியர்கள், குடிப்பிரியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.தகவல் அறிந்த வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி பதிவையும் ஆராய்ந்தனர்.இதில் பெட்ரோல் குண்டு வீசியவர் பங்கூர் பேட் பகுதியை சேர்ந்த குருசாமி மகன் அருண்ராஜ்,25; என்பதும், இவர் புதுச்சேரி பிரபல ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.இவர் நேற்று காலை முதல் மாலை வரை இந்த பாரில் ரூ 1,500க்கு மது குடித்துள்ளதும், கையில் பணம் இல்லாததால் கடனாக ஒரு பீர் கேட்ட போது கொடுக்காததால் ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டு தயாரித்து, பாரில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !