| ADDED : பிப் 03, 2024 07:30 AM
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் இந்திய உளவியல் சங்கம் சார்பில், 'தொழில் திறன் மேம்பாட்டில் உளவியல் பயன்பாடு' குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.பல்கலைக்கழக துணை வேந்தர் (பொ) தரணிக்கரசு வரவேற்றார்.புதுச்சேரி பல்கலைக்கழக மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையத்தின் இயக்குனர் (பொ) பாஞ்.ராமலிங்கம், ஆந்திர பல்கலைக்ழக பேராசிரியர் ராஜூ உள்ளிட்ட இந்திய அளவிலான பல்வேறு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். கவர்னர் தமிழிசை கருத்தரங்கை துவக்கி வைத்து, விழா மலரை வெளியிட்டு பேசியதாவது; நிலைத் தன்மையானது மனதிற்கு இருக்காது. ஆனாலும் அதை நிலையான தன்மையுடன் நாம் வைத்திருக்க வேண்டும். பதட்டமான சூழலில் செய்யும் காரியத்தை சரியாக செய்ய முடியாது.நாம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சரியான சமநிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு பெண்ணால் ஆணையும் பெண்ணையும் சரியாக கையாள முடியும். ஆனால், ஒரு ஆணால் சமமாக இருவரையும் கையாள முடியாது.சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் மனநிலை அமைதியாக இருக்கும்போது சிக்கல்கள் சரியாகும். மனரீதியிலாக ஒருவரை குழந்தையிலிருந்து சரியாக கையாள வேண்டும்.குழந்தைகளை அனைத்து விதமான சிக்கல்களையும் எதிர்கொள்வதற்கு தயாராக பழக்க வேண்டும். குழந்தைகளை பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் வளர்க்கும் போது அவர்கள் சமூகத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.உங்களது மகிழ்ச்சியை எதற்காகவும், தொலைக்காதீர்கள். உங்களது மதிப்பெண்களை வைத்து உங்களது மகிழ்ச்சியை தொலைக்காதீர்கள். அதைப்போல நீங்கள் உங்களை புதுப்பித்துக் கொண்டு சாதனையாளராக மாற வேண்டும்.உலகில் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு இருக்கிறது. உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருந்தால் இந்த உலகில் ஏதும் சாத்தியமாக்க முடியும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.