புதுச்சேரி என்.ஆர் காங்.,-பா.ஜ., அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த என்.ஆர் காங்., பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் திடீரென நீக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதமாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை.இந்த நிலையில் கடந்த 1ம் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.இதற்காக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால் அவரது பதவி ஏற்பு விழாவிற்கு இரண்டு தேதி குறித்தும் திடீரென தள்ளி வைக்கப்பட்ட சூழ்நிலையில் அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நேற்று 10.35 மணிக்கு விமர்சையாக நடந்தது.காலை 10.36மணிக்கு தேசியகீதம், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த ஆணையை தலைமை செயலாளர் சரத்சவுகான் வாசித்து பதவி ஏற்பு விழாவை ஆரம்பித்து வைத்தார்.பதவிபிரமாணம் செய்ய கவர்னர் தமிழிசை அழைத்தார்.தொடர்ந்து 10.39 மணியளவில் கவர்னர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.கடவுள் பெயரில் உறுதி மொழி ஏற்றதிருமுருகன் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். 10.46மணியளவில் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.பின் அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் உடனடியாக மேடையில் இருந்த முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். தொடர்ந்து கவர்னர் தமிழிசை,தலைமை செயலர் சரத் சவுகான் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தாார். கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கி அவரிடமும் ஆசி பெற்றார்.அமைச்சர் திருமுருகனுக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சாய்சரவணக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், நேரு, ஜான்குமார், ரமேஷ்,ஆறுமுகம்,ரிச்சர்டு,அசோக்பாபு, பாஸ்கர், ராமலிங்கம், சிவசங்கர் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளிநாடு சென்றுள்ளதால் பங்கேற்கவில்லை. சட்டசபையில்
அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட திருமுருகன் சட்டசபைக்கு சென்று தனது அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவரை இருக்கையில் அமர வைத்த முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.தனது அலுவலகத்தில் தனி செயலாளர் நியமனம் தொடர்பான கோப்பில் அமைச்சர் திருமுருகன் கையெழுத்திட்டார். புறக்கணிப்பு
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அனைத்து எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது.ஆனால் தி.மு.க.,-காங்.,எம்.எல்.ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.இதேபோல் என்.ஆர் காங்.,-பா.ஜ.,கூட்டணி அரசினை கடுமையாக விமர்சித்து வரும் அ.தி.மு.க.,வும் பங்கேற்கவில்லை.