மூன்று பேர் கொலை வழக்கில் ரவுடியின் காதலி உட்பட மூவர் கைது
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த மூன்று பேர் கொலை வழக்கில் கைதான ரவுடி சத்யாவின் காதலி மற்றும் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில், பாழடைந்த இடிந்த வீட்டில் கடந்த 14ம் தேதி, உழவர்கரை வின்சென்ட் வீதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தெஸ்தான் மகன் ரஷி, 20; மற்றும் அவரது நண்பர் உருளையன்பேட்டை திடீர் நகர் பன்னி தேவா (எ) தேவக்குமார், 21; மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் ஆதி (எ) ஆதித்யா, 20, ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.போலீசார் விசாரணையில், ரெயின்போ நகர் ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள், ரஷி உள்ளிட்ட மூவரை கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது.பெரியக்கடை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ரவுடி சத்யா, 27; சக்தி (எ) சக்திவேல், 21; சரண், 21; சஞ்சீவி, 22; வெங்கடேஷ், 24; சாரதி (எ) தமிழரசன், 21; காமேஷ், 18; விஷ்ணு, 21; ரவிந்திரகுமார், 18; மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சத்யா மீது 5 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி உட்பட 16 வழக்குகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.போலீசாரின் தொடர் விசாரணையில், கொலை வழக்கில் தொடர்புடைய பெரியார் நகர், 10 வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஆப்ரகாம், 24; டி.வி.நகர், செபாஸ்தியர் வீதியைச் சேர்ந்த அரிஷ் பல்லாஸ், 25; ஆகியோரை கைது செய்யப்பட்டனர். கைதான ஆப்ரகாம் மீது 2 வழக்கும், பல்லாஸ் மீது 1 வழக்கு உள்ளது. கொலை செய்யப்பட்ட ஆதித்யாவின் மொபைல்போன், பைக்கு பறிமுதல் செய்யப்பட்டது.இருவரும் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ரவுடி சத்யாவின் காதலி வம்பாக்கீரப்பாளை யம், சுமித்ரா, 23;வை போலீசார் நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'ரவுடி சத்யா தனது காதலி சுமித்ராவை அழைத்து கொண்டு காதலர் தினம் கொண்டாட கடந்த 13ம் தேதி இரவு பாண்டி மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு வந்த ரஷி மற்றும் அவரது நண்பர்களை ரவுடி சத்யா சந்தித்து, 'என்னை கண்காணிக்க வந்தீர்களா' என கேட்டுள்ளார். அப்போது, சுமித்ரா உன்னை கண்காணிக்க வந்தவர்களை தீர்த்து கட்டு என, கூறியுள்ளார்.அதன்படி, ரவுடி சத்யா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ரஷி மூவரையும் கடத்தி சென்று கொலை செய்ததுடன், கொலை சம்பவத்திற்கு பிறகு சுமித்ராவுக்கு தகவல் தெரிவித்ததுடன், ரூ. 1,000 பணம் பெற்று கொண்டு தலைமறைவாகினார் என, கூறினர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.