ஓட்டல்களில் டிஜே நிகழ்ச்சி: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சிக்குட்டப்பட்ட பகுதிகளில் இயங்கும் ஓட்டல், ரெஸ்ட்டோ பார்களில் டிஜே நிகழ்ச்சி நடத்துபவர்கள் கேளிக்கை வரி செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தியுள்ளது. நகராட்சி ஆணையர் கந்தசாமி செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஓட்டல், ரெஸ்ட்டோ பார்களில், வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும், ஓட்டல் உள் அரங்குகளில் டிஜே பாடல் நிகழ்ச்சிகள், அனுமதியில்லாமல் நடைபெறுவது நகராட்சிக்கு தெரியவந்துள்ளது. புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கும் ரெஸ்ட்ரோ பார் மற்றும் உணவகங்களின், உள் அரங்குகளில் கேளிக்கை, டிஜே பாடல் நிகழ்ச்சி நடைபெறுவதால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த கேளிக்கை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் முறையாக நகராட்சியின் உரிய உரிமம் பெற்று நிகழ்ச்சிகளை நடத்துமாறு வலியுறுத்தப்படுகிறது. முன் அனுமதியின்றி நடத்தும் எந்தவித கேளிக்கை நிகழ்ச்சிகள் பிரிவு எண் 350 மற்றும் 449 நகராட்சி சட்டம் 1973-ன் படி, வணிக உரிமம் மற்றும் கேளிக்கை உரிமம் ரத்து செய்யப்பட்டு, பிரிவு எண்177 மற்றும் 474 (1) ( b)புதுச்சேரி நகராட்சி சட்டம் 1973-ன் படி, விதிகள் மற்றும் துணை விதிகள் படியும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.