போக்குவரத்து விழிப்புணர்வு
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே நடந்தது.புதுச்சேரியில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை வலியுறுத்தி போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக அண்ணா சிலை அருகே ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கினார். எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.அப்போது, அண்ணா சிலை வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து தொடர்பான கேள்விகளை கேட்டு சரியான பதில் அளித்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி இலவச ஹெல்மெட் வழங்கினார்.தொடர்ந்து, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதியாக கியூ.ஆர். கோடுஅடங்கிய அட்டை வாகன ஓட்டிகளிடம் வழங்கப்பட்டது.