| ADDED : பிப் 17, 2024 04:47 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கட் அவுட், பேனர்கள் அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு அவசர மனுவாக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் அனுப்பியுள்ளது.இது குறித்து அந்த இயக்க செயலாளர் ஜெகன்நாதன்,சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி பேனர் தடைச் சட்டத்தை அமலாக்கிட, சென்னை உயர் நீதிமன்றத்தில் 1-.10-.2021 மற்றும் 28.-4.-2022 ஆகிய தேதிகளில், தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருந்தும் நீதிபதிகளின் உத்தரவு மீது, புதுச்சேரி அரசும், உள்ளாட்சித் துறையும், காவல்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் கடந்த2.-2-.2024 அன்று புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகர், மக்கள் உயிர்காக்கும் பொருட்டு சட்டவிரோத விளம்பர பேனர்களை அகற்றிட வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், நகராட்சி,கொம்யூன் கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார்.இதனை அரசு துறை அதிகாரிகள் கோர்ட் உத்தரவை செயல்படுத்தாமல் உள்ளனர்.எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமலும், புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி ஆணையினையும் உதாசீனப்படுத்தியதுடன், நீதிமன்றத்தை அவமதித்து வரும், புதுச்சேரி அரசுத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அவசர மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த அவசர மனு நகல் புதுச்சேரி தலைமை நீதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.