| ADDED : நவ 14, 2025 04:00 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து துணை வேந்தர் பிரகாஷ் பாபு அழைப்பு விடுத்தார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ், கவர்னர் கைலாஷ்நாதனை ராஜ் நிவாஸில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சமீபத்தில் புதுடில்லியில் சந்தித்தது குறித்து எடுத்துரைத்தார். அத்துடன், 2025 டிசம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். தாங்களும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடுத்தார். மேலும், கி.யூ., ஆசியா பல்கலைக் கழக தரவரிசை 2026ல், புதுச்சேரி ப ல்கலைக்கழகம் ஆசிய அளவில் 470-வது இடத்தையும், இந்திய மத்திய பல்கலைக்கழகங்களில் 7வது இடத்தையும், இந்திய பல்கலைக்கழகங்களில் 63-வது இடத்தையும், தெற்காசிய பல்கலைக்கழகங்களில் 121வது இடத்தையும் பெற்றுள்ளதாக துணைவேந்தர் விளக்கினார். இதனைத் தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன், பல்கலைக்கழக கல்வித் தர பராமரிப்பை பாராட்டினார். அப்போது 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்றதற்காக, துணைவேந்தர் பிரகாஷ்பாபுக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தார்.