உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  12 நிமிடத்தில் பேச்சை முடித்த விஜய்: புதுவையில் தொண்டர்கள் ஏமாற்றம்

 12 நிமிடத்தில் பேச்சை முடித்த விஜய்: புதுவையில் தொண்டர்கள் ஏமாற்றம்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு, த.வெ.க., தலைவர் விஜய் பச்சைக் கொடி காட்டியுள்ளார். த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் மாதம் திருச்சியில் தன் பிரசாரத்தை துவங்கினார். கரூரில் அவரது பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தன் பிரசார பயணத்தை, அவர் நிறுத்தி வைத்தார். இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் உப்பளத்தில் நேற்று, 72 நாட்களுக்கு பின், அவர் மீண்டும் பிரசாரத்தை துவக்கினார். இதில் ஆண்கள் அதிகளவில் பங்கேற்றனர். கட்சி அறிவுறுத்தல்படி பெண்கள் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், சென்னை பனையூரில் இருந்து புறப்பட்ட விஜயை பார்ப்பதற்கு, ஆங்காங்கே சாலை ஓரங்களில் பெண்கள் அதிகளவில் நின்றிருந்தனர். புதுச்சேரி மாநில முதல்வர் வேட்பாளராக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்தை அறிவிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில், பெரிதாக வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. அம்மாநில முதல்வரையும், ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் செயல்பாடுகளையும் விஜய் விமர்சித்து பேசுவார் என்றும், த.வெ.க.வினர் எதிர்பார்த்தனர்; ஆனால், அதை விஜய் தவிர்த்து விட்டார். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து பெரிய அளவில் பேசாமல், உள்ளூர் பிரச்னைகளை கோரிக்கைகளாக வைத்து, 12 நிமிடங்கள் மட்டுமே விஜய் பேசினார். வந்த வேகத்தில் விஜய் பிரசாரத்தை முடித்ததால், பல மணி நேரம் காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். புதிதாக வளரும் கட்சி, ஆளும் கட்சியை எதிர்த்து, அரசியல் செய்வதுதான் வழக்கம். அதற்கு மாறாக, புதுச்சேரி மாநில அரசையும், முதல்வர் ரங்கசாமியையும் விஜய் இஷ்டத்துக்கு புகழ்ந்து தள்ளியதால் அரசு மீது அதிருப்தியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்.ஆர். காங்கிரஸ் அரசை புகழ்ந்து பேசியதால், அந்த கட்சியுடன் த.வெ.க. கூட்டணி அமைக்கும் என்பதை விஜய் உறுதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை