| ADDED : செப் 10, 2026 07:22 PM
புதுச்சேரி: இடைத்தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், வி.வி., பாட், நாளை தற்செயல் கலப்பு முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கு வரும் அக்., 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்தல் துறை சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் உத்தரவின்பேரில் தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்போட்டதை வாக்காளர் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளும் வி.வி., பாட் முதல் கட்ட பரிசோதனை கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி முதல் 24 வரை ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டது. முதல் கட்ட பரிசோதனையில் சரிபார்க்கப்பட்ட இயந்திரங்களில் இருந்து தேர்தலில் பயன்படுத்துவதற்கான தற்செயல் கலப்பு முறை நாளை 12ம் தேதி காலை 11:00 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. பாதுகாப்பு அறை:: அன்றைய தினமே மதியம் 3:00 மணியளவில், ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.,பாட் இயந்திரங்கள் முதல் தற்செயல் கலப்புப் பட்டியலின்படி பிரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு ஸ்டிராங் அறையில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது.