காத்திருந்து..காத்திருந்து... காலங்கள் போனது: எம்.எல்.ஏ., க்களின் வாரிய தலைவர் பதவி கனவு கானல் நீரானது
புதுச்சேரி: அதிகாரத்தில் இருந்தால் கூட சில நேரங்களில் அதிகாரத்தின் வாசனை கூட சுவாசிக்க முடியாமல் போய்விடும். அதற்குச் சாட்சியாக இருப்பது, புதுச்சேரி அரசு துறைகளின் கீழ் உள்ள வாரிய தலைவர் பதவிகள். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் பலருக்கும் அமைச்சர் கனவு. துருப்பு சீட் முதல்வர் கையில். ஆனால் அந்த கனவு நான்கு எம்.எல்.ஏ., க்களுக்கு தான் நிறைவேறியது. அமைச்சர் பதவி கிடைக்காத என்.ஆர்.காங்., பா.ஜ., மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் எப்படியாவது ஒரு வாரியத் தலைவர் பதவி கிடைத்துவிட்டால் போதும், பந்தாவாகஅதிகாரத்துடன் காரில் வலம் வரலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர். குறிப்பாக, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரத்தில் நாமும் பங்காளிதான்... வாரிய பதவியாவது நிச்சயம் கிடைக்கும் என எண்ணினர். ஆனால், முதல்வர் ரங்கசாமி மனதில் வேறு கணக்கு. ஏற்கனவே வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இதுல வாரிய தலைவர் பதவி வேற போட்டு இன்னும் அரசு நிறுவனங்களை எழுந்திருக்க முடியாதபடி மூழ்கடிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தால் வாரிய தலைவர் பதவி வேண்டும் என போர்க்கொடிகள் உயர்ந்தபோதெல்லாம், சிம்பிளாக 'நோ' சொல்லிவிட்டார் முதல்வர். கடந்த காலங்களில் கட்சிக்காக உழைத்தவர்களுக்குவாரிய தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் தான் முதல்வர் ரங்கசாமி. இந்த முறை சொந்த கட்சிக்காரர்களுக்கு கூட வாரிய தலைவர் பதவி கொடுக்க முன்வரவில்லை. அப்படியும் பா.ஜ., தரப்பில் வாரிய தலைவர் பதவி கேட்டு அழுத்தம் கொடுத்தபோது, பா.ஜ., அமைச்சர்கள் தங்களிடம் உள்ள வாரியத் தலைவர் பதவிகளை அவங்க எம்.எல்.ஏக்களுக்கு கொடுப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என அப்படியே அவரை நோக்கி வந்த பந்தை முதல்வர் ரங்கசாமி பா.ஜ., பக்கம் திருப்பிவிட்டார். முதல்வரின் இந்த மாஸ்டர் மூவ் பா.ஜ., முகாமில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பா.ஜ., அமைச்சர்களிடம் வாரிய தலைவர் பதவிகளை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பா.ஜ., அமைச்சர்களும் வாரிய பதவிகளை தரவில்லை. கடைசியாக முதல்வர் ரங்கசாமியை பா.ஜ., மேலிடம் சமாதானம் செய்தபோது கூட வாரிய தலைவர் பதவி குறித்து பேசப்பட்டது. இதனால், வாரியத் தலைவர் பதவியை எதிர்பார்த்த பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் இன்றோ நாளையோ கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் வழக்கம் போல் மாதங்கள் தான் உருண்டோடின. அமைச்சர்கள் தான் மாறினர். அடுத்த சட்டசபை கூட்டணிக்கும் அச்சாரம் போடப்பட்டது. ஆனால் அந்த வாரிய தலைவர் எனும் சிம்மாசனம் மட்டும் எவருக்கும் மாறவில்லை. எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்த அந்த வாரிய தலைவர் பதவி எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல பனிப்பாறை போல உருகி மறைந்தேபோய் விட்டது.இப்போது எம்.எல்.ஏ.,க்களின் மனநிலை, அந்தப் பதவி கிடைத்தாலும் எந்த உபயோகமும் இல்லை. இனி கொடுத்தாலும் கூட எங்களுக்குதேவையே இல்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.எம்.எல்.ஏ.,க்களில் வாரியத் தலைவர் ஆசைகள், கனவுகள் அனைத்தும் கானல் நீராகிவிட்டன. புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் இப்போது சொல்லப்படும் வரி இது தான்... அரசியலில் பதவி கொடுக்காமலே, பலரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் முதல்வர் ரங்கசாமி...