வன விலங்கு பூங்கா வேண்டும்: ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி: சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:ராமலிங்கம் (பா.ஜ):தேசிய அளவில் சுற்றுலாவில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் ஒரு தேசிய வனவிலங்கு பூங்காவை அரசு அமைக்க வேண்டும். அப்படி வன விலங்கு பூங்காவை கொண்டு வந்தால் அரசுக்கு கூடுதல் வருவாய், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.அமைச்சர் தேனீ ஜெயக்குமார்:தனித்துவமான மற்றும் அழிந்து வரும் தாவர வகைகளை பாதுகாத்து அதற்கான ஒரு தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தி, தனித்துவ தாவரப் பூங்கா என்ற பெயரில் உருவாக்க முடியும். இதன் மூலம் சுற்றுலாவையும், அடுத்த சந்ததியினர்களில் கல்வி தரத்தை உயர்த்தலாம்.ராமலிங்கம்(பா.ஜ):நான் தாவரவியல் பூங்கா வேண்டும் என்று கேள்வி கேட்கவில்லை. புதுச்சேரிக்கு வன விலங்கு பூங்கா தேவை என்று சொல்கின்றேன். அரசிடம் பணம் இல்லையென்றால் தனியார் பங்களிப்புடன் கூட இதனை செய்யலாம். இந்த வன விலங்கு பூங்காவை கொண்டு வரும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. போகோலேன்ட் வைத்துள்ளீர்கள். அதற்கான வழி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.அமைச்சர் தேனீ ஜெயக்குமார்:நானே மாட்டிகிட்டு முழிக்கின்றேன். இது தெரியாம நீங்கள் சொல்கின்றீர்கள். உங்களுடைய கருத்தும் நன்றாக தான் உள்ளது. ஆனால் புதுச்சேரி சிறிய மாநிலம். நம்மூரில் அவ்வளவு முதலீடு செய்துவிட்டு, திருப்பி எடுப்பது என்பது கடினமான காரியம். உங்களால் முடிந்தால் தாராளமாக செய்யலாம். அரசு தேவையான உதவிகளை செய்யும்.இவ்வாறு விவாதம் நடந்தது.