காரைக்கால் வந்த காவிரி நீர் மலர் துாவி வரவேற்பு
காரைக்கால், : காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த காவிரி நீரை அமைச்சர் திருமுருகன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மலர் துாவி வரவேற்றனர்.காரைக்கால் மாவட்டம் கடைமடைப் பகுதி என்பதால் தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் காவேரி தண்ணீர் வருகிறது. இதனால் விவசாயப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பின் காவிரி ஆற்றின் கடைமடை பகுதிக்கு வருகிறது.காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீரை நம்பியே 5 ஆயிரம் எக்டர் நிலப்பரப்பில் விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று காரைக்கால் எல்லையில் உள்ள அம்பகரத்துார் நுாலாறு, தட்டாறு, வாஞ்சியாறு வழியாக வந்தது. காவிரி நீரை அமைச்சர் திருமுருகன் மற்றும் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் மலர் துாவி வரவேற்று, குறுவை பாசனத்திற்கு திறந்து வைத்தனர்.அமைச்சர் பேசுகையில், 'காரைக்கால் மாவட்டத்தில் காவிரி தண்ணீரை கொண்டு 4,500 ஹெக்டர் சம்பா சாகுபடி நடைபெறவுள்ளது. மேலும் காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி., நீரை தமிழக அரசிடமிருந்து கேட்டு பெறப்படும். மேலும் விவசாயிகளுக்கு, தேவையான உரம், விதை நெல், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் மகேஷ், கடைமடை விவசாய சங்கத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.