ரவுடியின் முகத்தை வெட்டி சிதைத்தது ஏன்? கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்
புதுச்சேரி: அடிக்கடி இன்ஸ்டாகிராமில் முகத்தை காட்டியதால், கத்தியால் முகத்தை வெட்டியதாக கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உட்பட 4 பேர், போலீசில் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். லாஸ்பேட்டை நாவற்குளத்தை சேர்ந்தவர் ஜாக் பால், 23; ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. காய்கறி மற்றும் பழங்களை வாகனம் மூலம் விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், இவரது நண்பரின் மகள் பிறந்த நாள் விழாவில், பங்கேற்க, பைக்கில் சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, கத்தியால் முகத்தில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றது. உயிருக்கு போராடிய அவரை, போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, சண்முகாபுரத்தை சேர்ந்த பச்சையப்பன், 22, முகிலன்,21; மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மூன்று மொபைல்கள், 2 பைக், 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்ய முயன்றபோது, கீழே விழுந்ததில் பச்சையப்பன், முகிலன் ஆகியோரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விசாரணையில் , கடந்த மே மாதம் 31ம் தேதி, காதல் தகராறில், பஞ்சாயத்து செய்தில், மேட்டுப்பாளையம் சண்முகாபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் உட்பட 3 பேரை, ஜாக்கப் பால் கத்தியால் வெட்டியுள்ளார். அதன் காரணமாக, பச்சையப்பனுக்கும், ஜாக்கப் பாலுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதில், பச்சையப்பனை கொலை செய்ய, ஜாக்கப் பால், ரவுடியான மிட்டாய் மணி என்பவரை அணுகி, ரூட் போட்டு தரும்படி கேட்டுள்ளார். அதனை மிட்டாய் மணி, பச்சையப்பனிடம் தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த பச்சையப்பன், தன்னை கொலை செய்வதற்குள், ஜாக்கப் பாலை கொலை செய்ய, திட்டம் தீட்டி வந்துள்ளார். இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில் ஜாக்கப் பால், தனது நண்பரின் மகள் பிறந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பதிவிட்டு வந்துள்ளார். அதை கண்காணித்த பச்சையப்பன், பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஜாக்கப் பால் செல்வதை அறிந்த, பச்சையப்பபன் தனது கூட்டாளிகளுடன், லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அருகே பதுங்கி இருந்து, பைக்கில் வந்த ஜாக்கப் பாலை சுற்றி வளைத்து வெட்டியதும், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி முகத்தை காட்டியதால், கத்தியால் முகத்தை குறிவைத்து சிதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உட்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பச்சையப்பன், முகிலன் காலாப்பட்டு மத்திய சிறையிலும், சிறுவர்கள் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய சந்துரு என்பவரை தேடி வருகின்றனர்.