உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு அறிவித்த புயல் நிவாரணம் கிடைக்குமா?: விடுபட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

அரசு அறிவித்த புயல் நிவாரணம் கிடைக்குமா?: விடுபட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: பெஞ்சல் புயலில் பாதித்த விவசாய பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண பட்டியலில் விடுபட்ட விவசாயிகள், புயல் நிவாரணம் தங்களுக்கும் கிடைக்குமா என எதிர்பார்த்து கொண்டுள்ளனர். வங்கக் கடலில் கடந்த நவம்பர் மாதம் உருவான பெஞ்சல் புயல் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் புதுச்சேரி மாநிலம் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. குடியிருப்புகள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளப் பெருக்கில் விளைநிலங்கள் மூழ்கியதால், விவசாயிகள் பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர்.வெள்ளம் பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதித்த விவசாய நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் அதிகப்பட்சம் ஒரு விவசாயிக்கு 2 எக்டேருக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள 20 உழவர் உதவியகங்கள் மூலம், மத்திய அரசின் 'அக்ரி ஸ்டாக்' திட்டத்தில் பதிவு செய்து, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதித்த விவசாயிகள் விபரங்களை சேகரித்தனர். அதில், 12 ஆயிரத்து 955 விவசாயிகளுக்கு சொந்தமான 9,922 எக்டேர் நிலங்கள் புயல், மழை மற்றும் வெள்ளத்தில் பாதித்ததாக அரசால் அறிவிக்கப்பட்டு இதற்காக நிவாரணமாக 24 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்து 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஜனவரி 6ம் தேதி ஏனாமில் நடந்த மலர் கண்காட்சியில், புயலால் பாதித்த 199 விவசாயிகளுக்கு ரூ.24.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. காரைக்காலில் கடந்த 16ம் தேதி நடந்த விழாவில், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.இறுதியாக கடந்த 22ம் தேதி புதுச்சேரி பிராந்தியத்தில் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் துவக்கி வைத்தார். இருப்பினும் நிவாரணத் தொகை கடந்த 29ம் தேதிதான் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.அவ்வாறு செலுத்தப்பட்ட நிவாரணத் தொகை வில்லியனுார், காட்டேரிக்குப்பம் சுத்துக்கேணி, கூடப்பாக்கம், தொண்டமாநத்தம் கிராமங்களில் பல விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் சேரவில்லை. சந்தேகமடைந்த விவசாயிகள் நேற்று முன்தினம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோது, விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து மதிப்பீடு செய்தபோது பல விவசாயிகளின் பெயர் விடுபட்டுள்ளது தெரிய வந்ததும் உஷாரான அதிகாரிகள், விடுபட்டவர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு பெற்று வழங்க ஏற்பாடு செய்வதாக கூறி விவசாயிகளை சமாதானம் செய்து அனுப்பினர்.முதல்வர் அறிவித்து 2 மாதத்திற்கு பிறகே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுபட்டவர்களுக்கு எப்போது தனி நிதி ஒதுக்கீடு பெற்று தருவார்களோ என விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர்.புயல் நிவாரணத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தபோதே பயனாளிகள் பட்டியலை, பணம் வழங்குவதற்கு முன்பாகவும், பணம் வழங்கிய பின்பும் சமூக தணிக்கைக்கு வெளியிட அறிவுறுத்தினார். ஆனால், அதிகாரிகள் பயனாளிகள் பட்டியலை இதுவரை சமூக தணிக்கைக்கு வெளியிடாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கிளரிக்கல் மிஸ்டேக்'

இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநரிடம் கேட்டபோது, புயலால் பாதித்த விவசாயிகளின் பெயர் எதுவும் விடுபடவில்லை. சேத மதிப்பீடு குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது. 'கிளரிக்கல் மிஸ்டேக்' காரணமாக 36 விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி