உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்த திட்டங்கள் துவங்கப்படுமா?: விவசாயிகள் ஏக்கத்துடன் எதிர்பார்ப்பு

பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்த திட்டங்கள் துவங்கப்படுமா?: விவசாயிகள் ஏக்கத்துடன் எதிர்பார்ப்பு

வேளாண் மேம்பாட்டிற்காக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகள் இனியேனும்நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.புதுச்சேரி: மாநிலத்தின் பிரதான தொழிலாக உள்ள விவசாயத்தையும், அதனையே நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதல்வர் ரங்கசாமி, கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், வேளாண் துறைகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.அதில், பொதுமக்கள் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 'என் வீடு என் நிலம்' என்ற காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் செயல்படுத்தப்படும். மாடி தோட்டம் அமைக்க தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள் வழங்கப்படும். இத்திட்டம் ஆடிப்பட்டம் முதல் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில், மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளி வளாகத்தில் 'காய்கறி மற்றும் சத்துணவு தோட்டம் அமைக்க பள்ளி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியன்' திட்டத்தின் கீழ் விவசாயிகள், சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் நிறுவதற்கு வழங்கப்படும் 30 சதவீத மானியத்தை 100 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் ரூ.5.5 கோடி அரசின் நிதிச்சுமை குறையும் இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.விவசாயிகள் பயிரிடும் நெல்லிற்கு ஆதார விலையை உறுதி செய்யும் பொருட்டு, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லின் தரத்தை இந்திய உணவுக்கழகம் மூலம் கொள்முதல் செய்வதற்கு தேவையான அளவிற்கு உயர்த்த, அறுவடைக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து, இதற்காக ரூ.171.22 கோடி வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.விவசாயிகளின் நலனுக்காக முதல்வர் அறிவித்த திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்க பணிகளை வேளாண் அதிகாரிகள் மேற்கொண்டு, நிர்வாக ஒப்புதலை பெற்று, வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்த வேளாண் திட்டங்களில், 'என் வீடு என் நிலம்' திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் நிர்வாக ஒப்புதல் பெற்றும் திட்டம் இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆடிப்பட்டம் முடிந்தும், தற்போது தை பட்டமும் முடிய உள்ளது.அதேபோன்று, விவசாயிகள் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் அமைக்கும் திட்டத்திற்கு புதுச்சேரி பிராந்தியத்திற்கு ரூ.4.75 கோடியும், காரைக்கால் பிராந்தியத்திற்கு ரூ.1.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டம் அறிவித்து 6 மாதங்களாகியும், திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் பூர்வாங்க பணிகள் கூட இதுவரை துவங்கப்படவில்லை.மாறாக, சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் அமைக்கும் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை, திருந்திய வரவு செலவு மதிப்பீட்டில் புதுச்சேரி பிராந்தியத்திற்கு ரூ.1.25 லட்சமாகவும், காரைக்கால் பிராந்தியத்திற்கு 78.50 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி வேறு திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.விவசாயிகளின் மேம்பாட்டிற்காக முதல்வர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும், வேளாண் துறை அதிகாரிகளின் அலட்சியத்தினால், செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த நிதியாண்டு முடிய இன்னும் 60 நாட்களே உள்ளது. அதற்குள்ளாவது, திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர முதல்வரும், வேளாண் அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

கொள்முதலும் இல்லை

நெல்லுக்கு ஆதார விலை கிடைத்திட, தற்போது இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலேயே இந்திய உணவுக்கழக அதிகாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது.ஆனால், புதுச்சேரி பிராந்தியத்தில் அறுவடை பணி துவங்கி 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை ஒரு மூட்டை நெல் கூட இந்திய உணவுக்கழகத்தால் நேரடியாக கொள்முதல் செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !