உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிகிச்சைக்கு சென்ற பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

சிகிச்சைக்கு சென்ற பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

வில்லியனுாரில் பரபரப்புபுதுச்சேரி: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் பெண் இறந்ததாக கூறி, உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி, வில்லியனுார் கணுவாப்பேட்டை, வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்; எலக்ட்ரிஷியன். இவரது மனைவி வள்ளி, 38; இவர்களுக்கு 18 மற்றும் 16 வயதில் இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, வள்ளிக்கு திடீரென ஏற்பட்ட வயிறு வலி காரணமாக வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்தார்.பணியில் டாக்டர் பரிசோதித்து வலிக்கு மாத்திரை கொடுத்து அனுப்பி உள்ளார். வீட்டிற்கு சென்ற வள்ளிக்கு மீண்டும் வலி அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை 5:30 மணிக்கு மீண்டும் வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தார். அப்போது, வள்ளி இரவு சாப்பிட்ட உணவால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது என கூறி, ஓ.ஆர்.எஸ்., பவுடர் மற்றும் வலிக்கு ஊசி செலுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.வள்ளியுடன் வந்த உறவினர்கள், அரசு பொதுமருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லலாமா என கேட்டுள்ளனர். அதற்கு, சாதாரண வலி தான் சரியாகிவிடும் என கூறி அனுப்பினர்.இந்நிலையில், நேற்று மதியம் 1:30 மணிக்கு கடும் வயிற்று வலியுடன் அவதிப்பட்ட வள்ளி, கழிப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். அவரது உறவினர்கள் வள்ளியை மீட்டு மீண்டும் வில்லியனுார் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். டாக்டர் பரிசோதித்தபோது வள்ளி வரும் வழியிலே இறந்தது தெரியவந்தது. ஆனால் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.இந்நிலையில், வள்ளியின் உறவினர்கள் மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டனர். அதற்கு ஆம்புலன்ஸ் பழுது, டிரைவர் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே வள்ளி இறந்துவிட்டது உறவினர்களுக்கு தெரிய வந்தது. ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள்,வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான முறையில் மருத்துவம் பார்ப்பது இல்லை, ஆம்புலன்ஸ்சுக்கு டிரைவர் இல்லை என என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பேச்சுவார்த்தைக்கு யாரும் முன் வராததால், வள்ளியின் உடலை ஸ்டெச்சருடன் கொண்டு சென்றுஏழை மாரியம்மன் கோவில் எதிரில் சாலையில் வைத்து மதியம் 2:45 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது.வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, 3:30 மணிக்கு சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.வள்ளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக 1 மணி நேரம் வில்லியனுார் சாலையில் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை