வெங்கட்டா நகர் பூங்காவில் யோகா பயிற்சி: பொதுமக்கள் பங்கேற்கலாம்
புதுச்சேரி: வெங்கட்டா நகர் பூங்காவில் வாரந்தோறும் சனிக்கிழமையில் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.புதுச்சேரி 45 அடி ரோடு வெங்கட்டா நகர் அருகில் 1 லட்சத்து 25 ஆயிரம் சதுரடியில் 10 ஆண்டுகளுக்கு முன் உழவர்கரை நகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், 55 ஆயிரம் சதுரடியில் பூங்காவில், வாக்கிங் செல்வதற்கான நடைபாதை தளம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், சிறிய நுாலகம், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.திறந்தவெளி ஜிம்மில் காலை, மாலையில் பலரும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வெங்கட்டா நகர் பூங்காவில் யோகா பயிற்சி மேற்கொள்ள சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை மாதம் யோகா மேடை அமைக்கப்பட்டது.இங்கு தற்போது வாரத்தோறும் யோகா பயிற்சி அளிக்க உழவர்கரை நகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறும்போது, வெங்கட்டா நகரில் உள்ள யோகா மேடையில் ஆயுஷ் துறை மூலம் தேர்ந்த பயிற்றுநர்களை கொண்டு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த யோகா பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்றார்.