உன்னதி, கிரண் அபாரம்: ஒடிசா பாட்மின்டனில் சாம்பியன்
கட்டாக்: ஒடிசா பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி, கிரண் ஜார்ஜ் சாம்பியன் பட்டம் வென்றனர்.ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் உன்னதி ஹூடா 18, இஷாராணி 21, மோதினர். முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய உன்னதி, 2வது செட்டை 21-10 என வென்றார். மொத்தம் 31 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21-17, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 25, இந்தோனேஷியாவின் முகமது யூசுப் 19, மோதினர். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய கிரண், 2வது செட்டை 13-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 21-16 என தன்வசப்படுத்தினார்.ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கிரண் 21-14, 13-21, 21-16 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.