கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: இலங்கை மீண்டும் தோல்வி
காலே: இரண்டாவது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. சொந்த மண்ணில் இலங்கை அணி ஏமாற்றியது.இலங்கை சென்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 257, ஆஸ்திரேலியா 414 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 211/8 ரன் எடுத்திருந்தது. குசால் மெண்டிஸ் (48) அவுட்டாகாமல் இருந்தார்.நான்காம் நாள் ஆட்டத்தில் அரைசதம் எட்டிய குசால் மெண்டிஸ் (50), லியான் 'சுழலில்' சிக்கினார். லகிரு குமாரா (9) ஏமாற்றினார். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 231 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் குனேமன், லியான் தலா 4, வெப்ஸ்டர் 2 விக்கெட் சாய்த்தனர்.பின் 75 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (20) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த உஸ்மான் கவாஜா (27*), மார்னஸ் லபுசேன் (26*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 75/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி வென்றார். தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (272 ரன்) கைப்பற்றினார்.
14 ஆண்டுகளுக்கு பின்
ஆஸ்திரேலிய அணி, 14 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடைசியாக 2011ல் இங்கு நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா 1-0 என வென்றிருந்தது. அதன்பின் 2016ல் ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்திய ஆஸ்திரேலியா 0-3 என இழந்தது. கடந்த 2022ல் இவ்விரு அணிகள் மோதிய தொடர் 1-1 என சமன் ஆனது. இத்தொடருக்கு கம்மின்ஸ் கேப்டனாக இருந்தார்.553 விக்கெட்இப்போட்டியில் 7 விக்கெட் (3+4) சாய்த்த ஆஸ்திரேலியாவின் லியான், இதுவரை 136 டெஸ்டில், 553 விக்கெட் கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் அரங்கில் 550 விக்கெட் வீழ்த்திய 3வது ஆஸ்திரேலிய பவுலரானார். ஏற்கனவே வார்ன் (708 விக்கெட், 145 டெஸ்ட்), மெக்ராத் (563 விக்கெட், 124 டெஸ்ட்) இம்மைல்கல்லை எட்டினர்.200 'கேட்ச்'டெஸ்ட் அரங்கில் அதிக 'கேட்ச்' செய்த பீல்டர் பட்டியலில் 4வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் காலிசுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்மித். இருவரும் தலா 200 'கேட்ச்' செய்தனர். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங் (196 'கேட்ச்') 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் டிராவிட் (210 'கேட்ச்'), இங்கிலாந்தின் ஜோ ரூட் (207), இலங்கையின் ஜெயவர்தனே (205) உள்ளனர்.
கருணாரத்னே ஓய்வு
இலங்கை அணியின் துவக்க வீரர் திமுத் கருணாரத்னே 36. கடந்த 2012ல் நியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்டில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காலேயில் நடந்த 2வது டெஸ்ட், இவரது 100வது டெஸ்ட் ஆனது. 100 டெஸ்டில் விளையாடிய 7வது இலங்கை வீரரானார். இப்போட்டியுடன் இவர், டெஸ்ட் அரங்கில் இருந்து விடை பெற்றார். இதுவரை 100 டெஸ்டில், 16 சதம் உட்பட 7222 ரன் எடுத்துள்ளார். தவிர இவர், 30 டெஸ்டில் (2019-2023, 12 வெற்றி, 6 'டிரா', 12 தோல்வி) இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இவருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.