புதுடில்லி: பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூரு அணி முதன்முறையாக கோப்பை வென்றது. பைனலில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டில்லி அணி மீண்டும் பைனலில் ஏமாற்றியது.இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடந்தது. டில்லியில் நடந்த பைனலில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின.
ஷபாலி விளாசல்
முதலில் 'பேட்' செய்த டில்லி அணிக்கு கேப்டன் லானிங், ஷபாலி வர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. மோலினக்ஸ், ரேனுகா, எல்லிஸ் பெர்ரி பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார் ஷபாலி. மறுமுனையில் அசத்திய லானிங், ரேனுகா பந்தில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது மோலினக்ஸ் பந்தில் ஷபாலி (44 ரன், 3 சிக்சர், 2 பவுண்டரி) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய மோலினக்ஸ் 'சுழலில்' ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0), ஆலிஸ் கேப்சி (0) போல்டாகினர். கேப்டன் லானிங் (23) ஓரளவு கைகொடுத்தார்.ஆஷா சோபனா 'சுழலில்' மரிஜான்னே காப் (8), ஜெஸ் ஜோனாசென் (3) சிக்கினர். ராதா யாதவ் (12) 'ரன்-அவுட்' ஆனார். ஸ்ரேயங்கா பந்தில் மின்னு மணி (5), அருந்ததி ரெட்டி (10), தனியா பாட்டியா (0) அவுட்டாகினர். டில்லி அணி 18.3 ஓவரில் 113 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஷிகா பாண்டே (5) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஸ்ரேயங்கா 4, மோலினக்ஸ் 3, ஆஷா 2 விக்கெட் சாய்த்தனர்.
நல்ல துவக்கம்
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சோபி டெவின் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ராதா யாதவ் வீசிய 7வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் டெவின். முதல் விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது ஷிகா பாண்டே பந்தில் டெவின் (32) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய மந்தனா (31), மின்னு மணி பந்தில் ஆட்டமிழந்தார்.பின் இணைந்த எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் ஜோடி நம்பிக்கை தந்தது. கடைசி ஓவரில் பெங்களூருவின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டன. அருந்ததி பந்துவீசினார். முதலிரண்டு பந்தில் 2 ரன் கிடைத்தது. மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிச்சா கோஷ் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெர்ரி (35), ரிச்சா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரூ. 6 கோடி பரிசு
கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு ரூ. 6 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த டில்லி அணிக்கு ரூ. 3 கோடி கிடைத்தது.
இதுவே அதிகம்
* இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீராங்கனை வரிசையில் பெங்களூருவின் எல்லிஸ் பெர்ரி (347 ரன், 9 போட்டி) முதலிடம் பிடித்தார்.* அதிக விக்கெட் சாய்த்த பவுலர் பட்டியலில் பெங்களூருவின் ஸ்ரேயங்கா பாட்டீல் (13 விக்கெட், 8 போட்டி) முதலிடத்தை கைப்பற்றினார்.* அதிக சிக்சர் பறக்கவிட்ட வீராங்கனை வரிசையில் டில்லியின் ஷபாலி வர்மா (20 சிக்சர், 9 போட்டி) முதலிடத்தை தட்டிச் சென்றார்.