இடம் மாறுமா சாம்பியன்ஸ் டிராபி * இன்று ஐ.சி.சி., முடிவு
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் அட்டவணை குறித்து இன்று ஐ.சி.சி., இறுதி முடிவு எடுக்க உள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் பங்கேற்கும். பாகிஸ்தானில் இத்தொடர் வரும், 2025, பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஆனால் 2008ல் மும்பை, பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் சென்றதில்லை. இதனால், 'இந்திய அணி பங்கேற்கும் போட்டி, பைனலை துபாயில் நடத்த வேண்டும்,' என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஐ.சி.சி.,யிடம் தெரிவித்தது. இதை ஏற்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுத்தது. 'டி.வி' ஒளிபரப்பு நிறுவனம், ஐ.சி.சி., ஒப்பந்தப்படி, 90 நாளுக்கு முன் அட்டவணை வெளியிட வேண்டும். தற்போது 82 நாள் மட்டும் உள்ள நிலையில் தொடர் அட்டவணை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாமல், இழுபறி நீடிக்கிறது. இதுகுறித்து முடிவெடுக்க, ஐ.சி.சி., சார்பில் வீடியோ கான்பெரன்சிங் வழியாக இன்று கூட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து வெளியான செய்தி:சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது தான் சரியாக இருக்கும். தொடரின் நலனுக்காக அனைவரும் பேசி புத்திசாலித்தனமான முடிவெடுப்பர் என நம்புகிறோம். ஏனெனில் லீக் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்று 'டிவி' ஒளிபரப்பாளர்கள் விரும்புகின்றனர். 'நாக் அவுட்' போட்டியில் மோதும் நிலை வந்தால், அது ஒளிபரப்பாளர்களுக்கு 'போனஸ்' போல. மற்றபடி இரு அணிகளையும் வெவ்வேறு பிரிவில் வைக்க யாரும் விரும்ப மாட்டர். இதனால் முதலில் இந்திய அணி பங்கேற்கும் லீக் போட்டிகளை துபாய்க்கு மாற்ற வேண்டும் என பி.சி.பி.,யிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.