உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / காம்பிர் மனதிலே குழப்பமா: வெற்றிப் பாதைக்கு இந்தியா திரும்புமா

காம்பிர் மனதிலே குழப்பமா: வெற்றிப் பாதைக்கு இந்தியா திரும்புமா

மும்பை: இந்திய அணியின் தோல்விக்கு பயிற்சியாளர் கவுதம் காம்பிர் மீது கை காட்டப்படுகிறது. 'குறுகிய காலத்தில் இவரது திறமையை மதிப்பீடு செய்வது சரியல்ல. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரை அவகாசம் அளிக்க வேண்டும்,' என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூலையில் காம்பிர் நியமிக்கப்பட்டார். இவரது வியூகம் எடுபடாததால், இலங்கை மண்ணில் 27 ஆண்டுக்கு பின் ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. டெஸ்ட் வரலாற்றில், 3 போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி (எதிர் நியூசி.,) முதல் முறையாக 'ஒயிட் வாஷ்' ஆனது. தவறான ஆடுகளம்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடந்தது. முதல் நாள் மழை பெய்ததால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். இதை கணிக்க தவறிய கேப்டன் ரோகித் சர்மா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். நியூசிலாந்து 'வேகங்கள்' போட்டுத் தாக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்னுக்கு சுருண்டது. இறுதியில் தோற்றது. அடுத்து நடந்த புனே, மும்பை டெஸ்ட் போட்டிக்கு முழுவதும் சுழலுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை அமைக்கும்படி காம்பிர் வலியுறுத்தினார். இது லாட்டரி போன்றது. அதிர்ஷ்ட காற்று எதிரணி பக்கம் அடித்தால், நமக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணரவில்லை. புனேயில் சான்ட்னர், பெங்களூருவில் அஜாஸ் படேல் 'சுழல்' சாகசம் நிகழ்த்த, இந்திய அணி தோல்வி அடைந்தது. தொடரை 0-3 என இழந்தது. வீணான 'ரிவர்ஸ் ஸ்வீப்': மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில், 3வது இடத்தில் சிராஜை 'நைட்வாட்ச்மேனாகவும்', 8வது இடத்தில் சர்பராஸ் கானையும் அனுப்பி குழப்பம் செய்தார் காம்பிர். தவிர, சுழலை சமாளிக்க 'ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்' அடிக்க வலியுறுத்தினார். இதில் கொஞ்சம் அசந்தாலும் விக்கெட் பறிபோகும். ரோகித், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் அவசரப்பட்டு 'ரிவர்ஸ் ஸ்வீப்' அடித்து அவுட்டாகினர். அதிகாரம் குறைப்பு: தற்போது காம்பிர் மீது பி.சி.சி.ஐ., அதிருப்தியில் உள்ளது. கடந்த காலங்களில் அணித்தேர்வில் பயிற்சியாளருக்கு அனுமதி கிடையாது. காம்பிருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக 'டி-20' அணிக்கு கேப்டன் ஆனார் சூர்யகுமார். ஆஸ்திரேலிய தொடருக்கு 'வேகப்புயல்' ஹர்ஷித் ராணா, 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் ரெட்டி தேர்வாகினர். இனி காம்பிரை அணித் தேர்வில் அனுமதிப்பது இல்லை என பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்விக்கான காரணம் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. கேப்டன் ரோகித் கூறுகையில்,''காம்பிர் அடங்கிய புதிய பயிற்சி குழுவினர் பதவி ஏற்று 4-5 மாதம் தான் ஆகிறது. குறுகிய காலத்தில் இவர்களை மதிப்பீடு செய்வது சரியல்ல. இவர்களது பணியை எளிமையாக்குவது வீரர்களின் பொறுப்பு,''என்றார். இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர் கூறுகையில்,''இந்திய அணி பயிற்சியாளராக பிரகாசிக்க சிறிது காலம் தேவைப்படும். நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி, காம்பிருக்கு ஒரு பாடம். தவறுகளை திருத்திக் கொண்டு, ஆஸ்திரேலிய தொடரில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,''என்றார்.அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 4ல் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும். இத்தொடர் காம்பிரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.யார் சிறந்தவர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்ற முதல் நான்கு மாத காலத்தில் இவர்களின் செயல்பாடு.* ரவி சாஸ்திரி 5 டெஸ்டில் 4 வெற்றி, 1 டிரா (வெற்றி சதவீதம் 80.00), 13 ஒருநாள் போட்டிகளில் 11 வெற்றி, 2 தோல்வி (வெற்றி சதவீதம் 84.61), 6 'டி-20' போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியை (வெற்றி சதவீதம் 66.66) சந்தித்தார்.* டிராவிட் 7 டெஸ்டில் 4 வெற்றி, 2 தோல்வி, 1 டிரா (வெற்றி சதவீதம் 57.14), 6 ஒருநாள் போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி (வெற்றி சதவீதம் 50.00), 9 'டி-20' போட்டிகளில் 9 வெற்றி (வெற்றி சதவீதம் 100.00) தேடித் தந்தார்.* காம்பிர் 5 டெஸ்டில் 2 வெற்றி, 3 தோல்வி (வெற்றி சதவீதம் 40.00), 3 ஒருநாள் போட்டிகளில் 2 தோல்வி, ஒரு 'டை'(வெற்றி சதவீதம் 0.00), 6 'டி-20' போட்டிகளில் 6 வெற்றியை (வெற்றி சதவீதம் 100.00) பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை